மாராடோனாவின் 'மந்திர' கோல்: உலக கோப்பை கால்பந்து கவுன்ட் டவுண்
மெக்சிகோவில், 1986ல் (மே 31 - ஜூன் 29) உலக கோப்பை கால்பந்து 13வது சீசன் நடந்தது. மொத்தம் 24 அணிகள் பங்கேற்றன. இத்தாலி ('ரவுண்டு-16'), உருகுவே ('ரவுண்டு-16'), பிரேசில் (காலிறுதி), ஸ்பெயின் (காலிறுதி) அணிகள் சாதிக்கவில்லை.
காலிறுதியில் (ஜூன் 22) அர்ஜென்டினா, இங்கிலாந்து அணிகள் மோதின. ஆட்டத்தின் 51வது நிமிடத்தில் அர்ஜென்டினா கேப்டன் மாரடோனா தலையால் முட்டுவது போல, தனது இடது கையால் பந்தை தட்டி தவறாக கோல் அடித்தார். இதனை கவனிக்காத நடுவர் நாசர், கோல் என அறிவித்தார். கால்பந்து போட்டிகளில் கோல்கீப்பர் தவிர, மற்ற வீரர்கள் கையால் பந்தை தொடுவதே தவறு. ஆனால், கையால் கோல் அடித்த அதிசயம் நிகழ்ந்தது. இதற்கு, இங்கிலாந்து கோல்கீப்பர் பீட்டர் ஷில்டன், சக வீரர்கள் எதிர்ப்பு தெரிவித்தும் பலனில்லாமல் போனது. தொடர்ந்து அசத்திய மாரடோனோ, 55வது நிமிடத்தில் நான்கு இங்கிலாந்து வீரர்களை கடந்து 'சூப்பர்' கோல் அடித்தார். இது நுாற்றாண்டின் சிறந்த கோலாக போற்றப்பட்டது. இறுதியில் அர்ஜென்டினா 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
அப்போது மாரடோனா கூறுகையில்,''எனது தலை, 'கடவுளின் கை' உதவியுடன் முதல் கோல் அடித்தேன்,''என, சமாளித்தார். முதல் அரையிறுதியில் அர்ஜென்டினா அணி 2-0 என, பெல்ஜியத்தை வீழ்த்தியது. மற்றொரு அரையிறுதியில் மேற்கு ஜெர்மனி 2-0 என, பிரான்சை வென்றது. பைனலில் மாரடோனாவின் துடிப்பான ஆட்டம் கைகொடுக்க, அர்ஜென்டினா அணி 3-2 என்ற கோல் கணக்கில் மேற்கு ஜெர்மனியை வீழ்த்தி, இரண்டாவது முறையாக (1978, 1986) உலக கோப்பையை கைப்பற்றியது.
'எக்ஸ்டிரா டைம்'
இத்தொடரில் நடந்த 52 போட்டியில், 132 கோல் பதிவானது. அர்ஜென்டினா சார்பில் 14 கோல் அடிக்கப்பட்டது. அதிகபட்சமாக 6 கோல் அடித்த இங்கிலாந்தின் கேரி லினேகர் 'கோல்டன் ஷூ' விருதை கைப்பற்றினார். அர்ஜென்டினாவின் மாரடோனா, சிறந்த வீரருக்கான 'கோல்டன் பால்' விருதை தட்டிச் சென்றார்.