வீடு ஒதுக்கக்கோரி மறியலில் ஈடுபட்ட மக்கள் கைது; கோட்டூர்புரத்தில் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
சென்னை: கோட்டூர்புரத்தில், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பில் வீடு ஒதுக்கக்கோரி மறியலில் ஈடுபட்டோரை, போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்தனர். இதனால் ஏற்பட்ட நெரிசலால், அப்பகுதியில் மூன்று மணி நேரம், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கோட்டூர்புரம், சித்ரா நகர் வாம்பே குடியிருப்பில் வசிக்கும் 200க்கும் மேற்பட்டோர், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பில் வீடு ஒதுக்கக்கோரி 170வது வட்ட அ.தி.மு.க., கவுன்சிலர் கதிர் முருகன் தலைமையில், காந்தி மண்டபம் சாலையில், நேற்று காலை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன் காரணமாக ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலால், கோட்டூர்புரம் சிவசக்தி விநாயகர் கோவிலில் இருந்து 4 கி.மீ., துாரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
இதனால் வேறு வழியின்றி, காந்தி மண்டபம் சாலை வழியாக ஆழ்வார்பேட்டை, நந்தனம் சென்ற வாகனங்களை, சர்தார் படேல் சாலை வழியாகவே, போக்குவரத்து போலீசார் திருப்பி விட்டனர். தகவலறிந்து வந்த கோட்டூர்புரம் போலீசார் மறியலில் ஈடுபட்டோரிடம் பேச்சு நடத்தினர்.
அப்போது, சித்ரா நகர் பகுதியில் வாழும் மக்களுக்கு, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள குடியிருப்பில் வீடு ஒதுக்கி தருவதாக, முன்னாள் எம்.எல்.ஏ.,வும் அமைச்சருமான சுப்பிரமணியன் வாய்மொழியாக உத்தரவாதம் அளித்தார். ஆனால், அங்கு வசித்து வரும் 195 குடும்பங்களுக்கு தற்போது வரை வீடு ஒதுக்கீடு செய்து தரவில்லை.
இந்நிலையில், சைதாப்பேட்டையைச் சேர்ந்த சிலருக்கு, இங்கே வீடுகள் ஒதுக்கப்பட்டு, நேற்று பூஜை போட்டுள்ளனர். இங்கு வசிப்போருக்கு வீடு ஒதுக்கீடு செய்யாமல், வேறு பகுதியில் உள்ளவர்களுக்கு ஒதுக்கப்பட்டது எப்படி என, அவர்கள் கேள்வி எழுப்பினர்.
இதனால், மறியலில் ஈடுபட்ட 120 பேரை, போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்தனர். அனைவரும், கோட்டூர்புரம் ஏரிக்கரையில் உள்ள வெங்கடேஸ்வரா திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டு, மதியம் 1:30 மணிக்கு விடுவிக்கப்பட்டனர்.
சாலை மறியல் போராட்டத்தால், காந்தி மண்டபம் சாலை மட்டுமின்றி அதன் இணைப்பு சாலைகளிலும், மூன்று மணி நேரம், போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இடைவிடாது வாகனங்கள் அணிவகுத்து நின்றதால், அண்ணா நுாலகம், அண்ணா பல்கலையிலிருந்து வெளியேற முடியாமல் பலரும் தவித்தனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:
குடியிருப்பு இடிப்பதற்கு முன், அதிகாரிகள் கணக்கீடு செய்து, புகைப்படம் எடுத்தனர்; 24,000 ரூபாய் கொடுத்து ஆவணங்களையும் கொடுத்தனர். ஆனால், தற்போது வரை எங்களுக்கென வீடு ஒதுக்கப்படவில்லை.
இங்கு, நிறைய இடைத்தரகர்கள் சுற்றிக் கொண்டிருக்கின்றனர். அவர்களிடம் 50,000 முதல் 1 லட்சம் வரை லஞ்சம் கொடுத்தால் உடனடியாக வீடு கிடைத்துவிடுகிறது. எங்களிடம் பணம் ஏதும் இல்லை. அதனால் தான் போராடி வருகிறோம்.
தமிழக முதல்வர், எங்களுக்கான வீடுகளை விரைந்து ஒதுக்கீடு செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல் போராட்டம் தொடரும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
அலைக்கழிப்பு என் பாட்டியின் பெயர், வீடு ஒதுக்கீடு பட்டியலில் உள்ளது. தற்போது, பாட்டி காணாமல் போய்விட்டார். இதுகுறித்து காவல் நிலையத்திலும் புகார் அளித்துள்ளேன். அவருக்கு ஒதுக்கப்பட்ட வீடு குறித்து கேட்டால் வாரிசு சான்றிதழ் கேட்கின்றனர். இறப்பு சான்றிதழ் இருந்தால் தான் வாரிசு சான்றிதழ் கிடைக்கும் என்பது கூட தெரியாமல், அதிகாரிகள் எங்களை அலைக்கழித்து வருகின்றனர். டேவிட், 38, சித்ரா நகர், கோட்டூர்புரம்
@quote@ வீடு கேட்டால் கைதா? தினகரன் கண்டனம்! சென்னை கோட்டூர்புரத்தில், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் கட்டி முடிக்கப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பில், வீடுகளை ஒப்படைக்கக் கோரி போராடிய பயனாளிகள் மீது, காவல் துறையை ஏவி கைது செய்திருக்கும், தமிழக வெற்றிக் கழக அரசின் அடக்குமுறை கடும் கண்டனத்திற்குரியது. தங்கள் உரிமைகளுக்காக போராடும் மக்களுக்கு பதில் சொல்ல, துறை சார்ந்த அமைச்சரும், எம்.எல்.ஏ.,வும் வராமல், காவல் துறையை பயன்படுத்தி அவர்களை ஒடுக்க நினைப்பது சர்வாதிகார போக்கு. இத்தகைய அடக்குமுறையை கைவிட்டு, பயனாளிகளுக்கான வீடுகளை விரைந்து ஒதுக்கீடு செய்வதை, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியமும், த.வெ.க., அரசும் உறுதி செய்ய வேண்டும். - தினகரன் அ.ம.மு.க., பொதுச்செயலர்quote
மேலும்
-
தெலுங்கானாவின் வளர்ச்சிப் பயணத்திற்கு முழு ஒத்துழைப்பு; பிரதமர் மோடி உறுதி
-
சிபிஎஸ்இ விடைத்தாள் சர்ச்சை விவகாரம்; விளக்கம் கோரியது மத்திய அரசு
-
மனித --- விலங்கு பிரச்னை: அதிகாரிகள் ஆலோசனை
-
'கல்வியில் சிறந்து விளங்கினால் தான் உயர்ந்த பதவிகளை அடைய முடியும்'
-
தெக்களூரில் குடிநீர் கேட்டு மக்கள் மறியல்; போலீசாரின் கைது நடவடிக்கையால் பரபரப்பு
-
மக்களின் நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்: கலெக்டர் உறுதி