பெண்ணிடம் அத்துமீறியவரை தட்டிக்கேட்ட நான்கு பேர் கைது

தாம்பரம்: மேற்கு வங்க மாநிலம், கொல்கட்டாவைச் சேர்ந்தவர் அத்வைது தாஸ், 36. தாம்பரம் அடுத்த பெருங்களத்துார், சமத்துவ பெரியார் நகரில் தங்கி, கட்டட வேலை செய்து வருகிறார்.

இவர், நேற்று முன்தினம் இரவு, அப்பகுதி இளம்பெண் ஒருவரிடம் தவறான முறையில் நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அப்பெண், குடும்பத்தினரிடமும், அக்கம் பக்கத்தினரிடமும் கூறியுள்ளார்.

இதையடுத்து அப்பகுதியைச் சேர்ந்த சிலர், அத்வைது தாஸை தாக்கியுள்ளனர். தகவலறிந்து, நள்ளிரவு வந்த போலீசார், இரு தரப்பையும் சமாதானப்படுத்தினர்.

இதற்கிடையே, தாக்குதலுக்கு உள்ளான அத்வைது தாஸ் தரப்பில், பீர்க்கன்காரணை போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதன்படி, சமத்துவ பெரியார் நகரைச் சேர்ந்த சேர்ந்த சம்பா, 47, ரமேஷ், 40, பாபு, 25, மணிகண்டன், 37, ஆகிய நான்கு பேரை, விசாரணைக்காக நேற்று காலை, போலீசார் அழைத்து சென்றனர்.

இந்நிலையில், பெண்ணிடம் தவறான முறையில் நடந்து கொண்ட வடமாநில நபரை கைது செய்யாமல், அதை தட்டிக்கேட்டவர்களை அழைத்து செல்வதா எனக்கூறி, அப்பகுதி மக்கள் 50க்கும் மேற்பட்டோர் திரண்டு, தாம்பரம் – கிஷ்கிந்தா சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் பேச்சு நடத்தியதை அடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இது தரப்பினரிடம் புகார் பெற்று விசாரணை நடந்து வருகிறது.

Advertisement