கார்பைடு கற்களால் பழமாகும் மாங்காய்களால்  உயிருக்கே உலை: நடவடிக்கையில் தொடரும் அலட்சியத்தால் அவதி

2

மாவட்டத்தில் பழநி, ஆயக்குடி, நத்தம், சாணார்பட்டி, கோபால்பட்டி சுற்றுப் பகுதிகளில் மா விவசாயம் முக்கிய தொழிலாக உள்ளது. தற்போது மாம்பழ சீசன் என்பதால் நாள்தோறும் டன் கணக்கில் மாங்காய்கள் அறுவடை செய்யப்படுகின்றன.

இவற்றை பழுக்க வைத்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும் தினந்தோறும் டன் கணக்கில் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகின்றன.

மாம்பழங்களுக்கான தேவையால் கூடுதல் லாபம் பெற வேண்டும் என்ற பேராசை சில வியாபாரிகளை தவறான பாதைக்கு அழைத்து சென்றுள்ளது.

இயற்கையான முறையில் மாம்பழங்களைப் பழுக்க வைக்காமல் கார்பைடு கற்கள், ஆபத்தான ரசாயனங்களை பயன்படுத்தி இயற்கைக்கு மாறாக செயற்கை முறையில் பழங்கள் பழுக்க வைக்கப்படுகின்றன. இதனால் மாம்பழங்கள் பார்ப்பதற்கு கவர்ச்சியாக இருந்தாலும் அவை உயிருக்கு உலை வைக்கும் நஞ்சாக மாறி உள்ளது. பொதுமக்களின் உயிருக்கு அச்சுறுத்தலாக விளங்கும் இந்த விவகாரத்தில் திண்டுக்கல் மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்காமல் மெத்தனமாகவும், அலட்சியமாகவும் செயல்பட்டு வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். தொடர் புகார்கள் அளிக்கப்பட்டும் அதிகாரிகள் தரப்பில் போதிய சோதனைகளோ, கடுமையான நடவடிக்கைகளோ இல்லை என அதிருப்தி எழுந்துள்ளது.

Advertisement