மதுரை மாநகராட்சி கமிஷனர் சித்ரா மாற்றம் புதிய கமிஷனராக கவுரவ் குமார் நியமனம்

மதுரை: மதுரை மாநகராட்சி கமிஷனர் சித்ரா, சென்னை மாநகராட்சி (வடக்கு) துணை கமிஷனராக மாற்றப்பட்டார். புதிய கமிஷனராகசென்னை குடிநீர் வடிகால் வழங்கல் கழிவுநீரேற்ற வாரிய நிர்வாக இயக்குநர் கவுரவ் குமார் நியமிக்கப்பட்டார்.

மதுரையில் கடந்தாண்டு பிப்ரவரியில் பொறுப்பேற்ற சித்ரா, பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டார்.

குறிப்பாக,மாநகராட்சியில் நடந்த ரூ.150 கோடி சொத்து வரி முறைகேடு விவகாரத்தில் அரசியல் அழுத்தங்களை கடந்து நேர்மையான விசாரணைக்கு தைரியமாக உத்தரவிட்டார்.

இதன் எதிரொலியாக மாநகராட்சி மேயர், 5 மண்டல தலைவர்கள் பதவியிழக்க நேரிட்டது. இதனால் மக்கள், சமூக ஆர்வலர்களின் பாராட்டை சித்ரா பெற்றார்.

சொத்துவரி பெயர் மாற்றம், பாதாளச் சாக்கடை இணைப்புதொடர்பாக சிறப்பு முகாம்கள் நடத்தி மாநகராட்சி வருவாயை அதிகரித்தார். மாநகராட்சி பள்ளிகள் மீது கொண்ட அக்கறையால் மாணவர்களை இஸ்ரோ, ஹைதராபாத் சைன்ஸ் பார்க் உள்ளிட்ட இடங்களுக்கு முதன் முதலில் கல்விச்சுற்றுலா அனுப்பி வைத்தார். சிறப்பு குழந்தைகள் நலன்சார்ந்த நடவடிக்கைகள் மேற்கொண்டார்.

அலுவலர்கள் நலன் சார்ந்து யோகா பயிற்சி பெற உத்தரவிட்டார். சித்திரை திருவிழாவின் போது கள்ளழகர் சென்ற வழிகளில் உடனுக்குடன் குப்பையைஅகற்றி சுத்தம் செய்ய உத்தரவிட்டு கவனம் பெற்றார்.

மாநகராட்சி சுற்றுச்சூழல் பூங்கா முழுமையாக செயல்படுவதில் கவனம் செலுத்தினார். தி.மு.க., ஆட்சியின்போது இரண்டு அமைச்சர்களையும் சமாளித்து திறம்பட நிர்வாகத்தை இவர் நடத்தியது குறிப்பிடத்தக்கது.

Advertisement