தக்காளியில் வெப்ப அழுத்தத்தை தவிர்க்க வேளாண் துறை 'ஐடியா'

பனமரத்துப்பட்டி:சேலம் மாவட்ட வேளாண் வானிலை மையம், சந்தியூர் வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் விஜயன் அறிக்கை:


சேலம் மாவட்டத்தில் வரும், 3 வரை, வானம் பெரும்பாலும் மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் லேசான, மிதமான, கனமழைக்கு வாய்ப்புள்ளது. வெப்பம், 27 முதல், 38 டிகிரி செல்ஷியஸ் வரை இருக்கும். மேற்கு திசையிலிருந்து மணிக்கு, 6 முதல், 10 கி.மீ., வேகத்தில் காற்று வீசும். காற்றின் ஈரப்பதம், 40 முதல், 80 சதவீதம் இருக்கும். அதிக வெப்ப நிலையால், தென்னை மரங்கள் வறட்சியால் பாதிக்கப்படுவதை தடுக்க,சொட்டு நீர் பாசனம் அமைக்க வேண்டும்.

மரத்துக்கு தினமும், 40 லிட்டர் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். 100 உரி மட்டை அல்லது 15 காய்ந்த தென்னை ஓலைகள் அல்லது 10 செ.மீ., தென்னை நார்கழிவு ஆகியவற்றை, மரத்தை சுற்றிலும் நிலப்போர்வை போல் அமைக்கவும். இதன் மூலம் பாசன நீர் ஆவி ஆகாமல் தடுக்கலாம்.

கோடைகாலத்தில் விவசாயிகள் தக்காளி சாகுபடி செய்யும் நிலையில், பகல், இரவு நேர வெப்பம் தொடர்ந்து அதிகரித்து வருவதால் வெப்ப அழுத்தம் ஏற்பட வாய்ப்புள்ளது.

பூக்கள் உதிர்தல், மகரந்தத்தின் உயிர் வாழும் திறன் குறைதல், பழங்கள் கருகி போதல், குறிப்பிட்ட வெப்ப நிலைக்கு மேல் லைக்கோபின் உற்பத்தி தடைபடுவதால் தக்காளி மஞ்சள் நிறமாகவும் சீரற்ற முறையில் உற்பத்தி, பழுத்தல், சுவை இல்லாமல் உருவாகும். இதை நிவர்த்தி செய்ய, பொட்டாசியம் நைட்ரேட், 0.5 சதவீதம், கால்சியம் குளோரைடு, 0.5 சதவீதம் கலந்து, 15 நாட்கள் இடைவெளியில், இரு முறை தெளிக்க வேண்டும்.

Advertisement