திருப்புவனத்தில் பாலத்தின் பக்கசுவரில் செடிகள்; அதிகாரிகள் பராமரிக்காததால் தாங்கும் திறன் கேள்விக்குறி
திருப்புவனம்:திருப்புவனம் வட்டாரத்தில் உள்ள பாலங்களின் பக்கவாட்டு பகுதி சுவரில் செடிகள் வளர்வதால் பாலத்தின் தாங்கும் திறன் கேள்விக்குறியாகி வருகிறது.
திருப்புவனத்தைச் சுற்றிலும் வைகை ஆறு, மதுரை- ராமேஸ்வரம் அகல ரயில் பாதை உள்ளிட்டவை இருப்பதால் போக்குவரத்திற்காக மேம்பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. திருப்புவனம், லாடனேந்தல், திருப்பாச்சேத்தி, மணலுார், சக்குடி உள்ளிட்ட இடங்களில் மேம்பாலங்கள் உள்ளன. இவற்றை முறையாக பராமரிக்காததால் பாலங்களின் பக்கசுவர்களில் மரங்கள் வளர்ந்து வருகின்றன.
திருப்புவனத்தில் இருந்து சிவகங்கை, பூவந்தி, திருமாஞ்சோலைக்கு வைகை ஆற்றை கடந்து தான் செல்ல முடியும்,. வைகை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட பாலம் 1995ல் வந்த வெள்ளத்தின் போது சேதமடைந்ததால், 1998ல் ஆறு கோடியே 21 லட்ச ரூபாய் செலவில் உயர் மட்ட பாலம் கட்டப்பட்டு வாகனப் போக்குவரத்து நடந்து வருகிறது. மாநில நெடுஞ்சாலைத்துறையின் கட்டுப்பாட்டில் இருந்த வரை பாலம் முறையாக பராமரிக்கப்பட்டது.
தொண்டி - மூணாறு தேசிய நெடுஞ்சாலையாக மாற்றப்பட்டதையடுத்து திருப்புவனம் வைகை ஆற்றுப்பாலம் தேசிய நெடுஞ்சாலைத்துறை வசம் ஒப்படைக்கப்பட்டது. நீர் வரத்தின் போது பாலம் சேதமடையாமல் தடுக்க பாலத்தின் அடியில் தடுப்புச்சுவர் ஏற்படுத்தப்பட்டது . அதன் பின் பாலத்தில் எந்த வித பராமரிப்பு பணியும் மேற்கொள்ளப்படவில்லை.
பாலத்தின் மேல்புறம் சேதமடைந்த பகுதி சீரமைக்கப்படவில்லை. பாலத்தின் மேற்பகுதியில் பல இடங்களில் மணல் தேங்கியதால் பாலத்தின் இருபக்கங்களிலும் மரங்கள் வளர தொடங்கியுள்ளன. தொடர்ந்து சில நாட்கள் பெய்த மழையால் பாலத்தின் பக்க வாட்டு பகுதிகளில் உள்ள இடை வெளிகளில் வேம்பு, புளி, அரச மரங்கள் வளர்ந்துள்ளன. மரங்களின் வேர்ப்பகுதி பாலத்தின் துாண் பகுதிகளையும் ஆக்கிரமித்து வளர்வதால் பாலத்தின் தாங்கு திறன் கேள்விக்குறியாகி உள்ளது. மேலும் பாலத்தில் கனரக வாகனங்கள் செல்லும் போது பலமாக அதிர்வு ஏற்படுகிறது.
பலமுறை தேசிய நெடுஞ்சாலைத்துறையிடம் புகார் கூறியும் செடிகள் இன்று வரை அகற்றப்படாமல் உள்ளது. பாலம் முழுவதுமாக சேதமடையும் முன் பாலத்தின் பக்கவாட்டு பகுதிகளில் வளர்ந்துள்ள மரங்களையும் மணல் குவியல்களையும் அகற்ற தேசிய நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஒட்டிகள் வலியுறுத்தியுள்ளனர்.