பராமரிப்பில்லாத பஸ் நிலையம் பேரம்பாக்கம் மக்கள் சிரமம்
பேரம்பாக்கம்: பேரம்பாக்கம் பேருந்து நிலையம், கடந்த 18 ஆண்டுகளாக பராமரிப்பில்லாமல் பரிதாப நிலையில் உள்ளது. இதற்கு, அதிகாரிகள் அலட்சியமே காரணமென, பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
கடம்பத்துார் ஒன்றியம், பேரம்பாக்கம் முதல் நிலை ஊராட்சியில், கடந்த 2007 - -08-ம் ஆண்டு, அப்போதைய ஸ்ரீபெரும்புதுார் தி.மு.க., - எம்.பி., கிருஷ்ணசாமி தொகுதி மேம்பாட்டு நிதி மற்றும் மாவட்டக்குழு உறுப்பினர் ஆதிசேஷன் நிதியின் கீழ், பேருந்து நிலையம் கட்டப்பட்டு பயன்பாட்டிற்கு வந்தது.
இங்குள்ள பேருந்து நிலையத்தை, பேரம்பாக்கம் மற்றும் சுற்றியுள்ள இருளஞ்சேரி, கூவம், குமாரச்சேரி, நரசிங்கபுரம் என, 30க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
கட்டி முடிக்கப்பட்டு 18 ஆண்டுகளாகியும், இன்று வரை எவ்வித பராமரிப்பு பணிகளும் மேற்கொள்ளாததால், அடிப்படை வசதிகளான இருக்கை, குடிநீர் போன்ற எவ்வித வசதிகளும் இல்லாமல், பயணியர் அவதிப்பட்டு வருகின்றனர்.
பேருந்து நிலையத்திற்கு சுற்றுச்சுவர் இல்லாததால், மாலை நேரங்களில் 'குடி' மையமாக மாறி விடுகிறது. இதற்கு, சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் அலட்சியமே காரணமென, பகுதி மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
எனவே, மாவட்ட நிர்வாகம் தலையிட்டு, பேரம்பாக்கத்தில் பேருந்து நிலையத்தை ஆய்வு செய்து சீரமைத்து, அடிப்படை வசதிகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயணியர் மற்றும் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.