அமைச்சருக்கு தெரியாமல் நடக்கிறதா பதவி உயர்வு கவுன்சிலிங்? புலம்பும் டாஸ்மாக் ஊழியர்கள்

1

மதுரை: 'டாஸ்மாக் நிறுவன உதவியாளர் பணியிடங்களை பாரபட்சமின்றி பதவி உயர்வு மூலம் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். மாறாக அமைச்சருக்கு தெரியாமல் தி.மு.க., ஆட்சியில் தெரிவித்தபடி பணியிடங்களை குறைத்துக் காட்டி நிரப்புவதாக' ஊழியர்கள் கருதுகின்றனர்.

தமிழகத்தில் டாஸ்மாக் சில்லரை விற்பனையை கடைகளை 2003 முதல் அரசே நடத்தி வருகிறது. இக்கடைகளை நடத்த பட்டப்படிப்பு மற்றும் ரூ.50 ஆயிரம் டெபாசிட்டுடன் மேற்பார்வையாளர்கள், பத்தாம் வகுப்பு மற்றும் ரூ.15 ஆயிரம் டெபாசிட்டுடன் விற்பனையாளர்கள், 8 ம் வகுப்பு தேர்ச்சி, ரூ.10 ஆயிரம் டெபாசிட்டுடன் உதவி விற்பனையாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

2016 ல் ஜெயலலிதா முதல்வரான போது கொள்கை அடிப்படையில் 2018 ல் 500 கடைகள் மூடப்பட்டன. இதனால் வேலையிழந்த கடை ஊழியர்களை பயன்படுத்திக் கொள்ள, டாஸ்மாக் துறையில் அமைச்சுப் பணியாளராக (கிளார்க்) உதவியாளர் பணியிடத்தில் நியமிக்க தேர்வு நடத்தினர். இதில் கடைகளில் பணியாற்றிய பட்டப்படிப்பு தகுதியுள்ள 8 ஆயிரம் பேர் பங்கேற்றனர். அவர்களில் 500 பேரை டாஸ்மாக்கில் 'இளநிலை உதவியாளராக' நியமித்தனர்.

டாஸ்மாக் ஊழியர்கள் கூறியதாவது:
டாஸ்மாக் நிறுவனம் துவங்கிய 1983க்குப் பின் 1985: கடந்த தி.மு.க., ஆட்சியில் டாஸ்மாக்கில் அரசாணை 44 ன்படி உதவியாளர் பணியிடங்கள் 1060 காலியாக இருந்தன. ஆனால் அவர்கள் அரசாணை 18 ன்படி 200 ஆக குறைத்துக் காட்டினர். இவற்றை இப்போது பதவி உயர்வு மூலம் நிரப்ப உள்ளனர். இதற்காக இன்று (ஜூன் 4) அனைத்து மண்டல அலுவலகங்களிலும் கவுன்சிலிங் நடக்கிறது.

ஆயிரம் பணியிடங்களுக்கு மேல் காலியாக உள்ளநிலையில் பதவி உயர்வுக்காக காத்திருக்கும் இளநிலை உதவியாளரான எங்கள் 500 பேருக்கும் வழங்கலாம். அவ்வாறு இல்லாமல் கடந்த ஆட்சியில் அறிவித்தபடி குறைந்த எண்ணிக்கையில் 200 பேருக்கு மட்டுமே பதவி உயர்வு வழங்க உள்ளனர். இதனால் ஒரே தகுதியில் உள்ள 300க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்படுகின்றனர்.

புதிதாக பொறுப்பேற்றுள்ள அமைச்சருக்கு தெரியாமல் அதிகாரிகளே நடத்துவதை ரத்து செய்து, பாரபட்சமின்றி பதவி உயர்வு வழங்க வேண்டும் என்கின்றனர்.

Advertisement