மைதானத்தை துாய்மைப்படுத்த வைத்த தீ மீன்வள கல்லுாரி முழுதும் பரவி பாதிப்பு
பொன்னேரி: பொன்னேரி மீன்வளக் கல்லுாரி விளையாட்டு மைதானத்தில், செடிகள் தீப்பற்றி எரிந்ததால், அருகில் வசிக்கும் குடியிருப்பு மக்கள், ரயில் பயணியர் இடையே பரபரப்பு ஏற்பட்டது.
பொன்னேரி டாக்டர் எம்.ஜி.ஆர்., மீன்வளக் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில், 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் மீன்வளம் சார்ந்த பட்டப்படிப்புகள் படிக்கின்றனர். இவர்கள், இதே வளாகத்தில் உள்ள விடுதியில் தங்கியுள்ளனர்.
இந்நிலையில், கல்லுாரி வளாகத்தில் உள்ள மைதானத்தில், விளையாட்டு போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்காக, நேற்று முன்தினம் இரவு, மைதானத்தை துாய்மைப்படுத்துவதற்காக அங்குள்ள செடி, கொடி களுக்கு தீ வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த தீயானது வேகமாக பரவி, வளாகம் முழுதும் உள்ள செடி, கொடிகள், கோரைப்புற்களில் பற்றி எரிந்தது. அதனால், விடுதியில் தங்கியிருந்த மாணவர்களிடையே பரபரப்பு ஏற்பட்டது.
மேலும், கல்லுாரி அருகில் வசிக்கும் வேண்பாக்கம் பள்ளம் பகுதி மக்கள், பதற்றம் அடைந்தனர். அங்கு, பெரும்பாலானவை கூரை வீடுகளாக இருந்ததால், பாதிப்பு ஏற்படுமோ என, அச்சத்திற்கு ஆளாகினர்.
கல்லுாரியின் கிழக்கு பகுதியில், பொன்னேரி ரயில் நிலையம் உள்ளதால், அங்கிருந்த பயணியரிடமும் பரபரப்பு ஏற்பட்டது. ரயில் நிலைய சாலை புகை மண்டலமாக மாறியது. இதனால், பொதுமக்கள், ரயில் பயணியர் சிரமத்திற்கு ஆளாகினர்.
தகவல் அறிந்த அங்கு விரைந்து வந்த பொன்னேரி தீயணைப்புத் துறையினர், தண்ணீரை பீய்ச்சி அடித்து, தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இரண்டு மணி நேர போராட்டத்திற்கு பின், தீயணைப்பு வீரர்கள் தீயை முழுமையாக கட்டுக்குள் கொண்டு வந்தனர்.