தேரில் மீஞ்சூர் வரதராஜ பெருமாள் உலா வடம்பிடித்து இழுத்து பக்தர்கள் பரவசம்

மீஞ்சூர்: பிரம்மோத்சவத்தை முன்னிட்டு, மீஞ்சூர் வரதராஜ பெருமாள் தேரில் வலம் வந்து, பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

வடகாஞ்சி எனப்படும் மீஞ்சூர், பெருந்தேவி தாயார் சமேத வரதராஜப்பெருமாள் கோவிலில், கடந்த மாதம், 28ல் கொடியேற்றத்துடன் பிரம்மோத்சவம் தொடங்கியது.

தொடர்ந்து, சூர்ய பிரபை, சந்திர பிரபை, கருடசேவை, அனுமந்த வாகனம், கேடய புறப்பாடு, நாக வாகனம், ஆளும் பல்லக்கு, ஹம்ச வாகனம், பெருமாள் - தாயார் திருக்கல்யாணம், யானை வாகனம் உள்ளிட்ட உத்சவங்களும், தினமும் திருவீதி உலாவும் நடந்தன.

பிரம்மோத்சவத்தின் ஏழாம் நாளான நேற்று, தேர் திருவிழா விமரிசையாக நடந்தது. காலை 9:00 மணிக்கு நிலையில் இருந்து புறப்பட்ட தேர், மாடவீதிகள் வழியாக வலம் வந்தது.

வண்ண மலர்கள், துணிகளால் அலங்கரிக்கப்பட்டிருந்த மரத்தேரில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் உற்சவ பெருமாள் வீற்றிருந்தார்.

வாண வேடிக்கை, மங்கள இசையுடன், 'கோவிந்தா, கோவிந்தா' என, பக்தர்கள் பக்தி பரவசத்துடன் தேரின் வடம் பிடித்து இழுத்து சென்றனர்.

பக்தர்களுக்கு குளிர்பானம், மோர் மற்றும் உணவு பொருட்களை, தன்னார்வலர்கள் வழங்கினர். மின் வாரியம், காவல் மற்றும் தீயணைப்பு துறையினர், பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர்.

Advertisement