அட்டப்பாளையம் சமூக காட்டில் சவுடு மண் கபளீகரம்: இரவு நேரங்களில் கொள்ளையர்கள் அட்டகாசம்

சோழவரம்: சோழவரம் அருகே உள்ள அட்டப்பாளையம் சமூக காட்டில், கழிவுநீர் மற்றும் குப்பை கொட்டப்படுவதை தொடர்ந்து, தற்போது இரவு நேரங்களில் சவுடு மண் வெட்டி எடுத்து விற்பனை செய்வதில், மண் கொள்ளையர்கள் தீவிரமாக ஈடுபட்டிருப்பது சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் அடுத்த அட்டப்பாளையம் கிராமத்தில், வனத்துறையின் கட்டுப்பாட்டில், 100 ஏக்கர் பரப்பு கொண்ட சமூக காடு உள்ளது. இங்கு, மான், முயல், மயில் உள்ளிட்ட பல்வேறு உயிரினங்கள் உள்ளன.

வனத்துறையின் கண்காணிப்பு இல்லாததால், காப்பு காட்டில் பல்வேறு சமூக விரோத செயல்கள் நடந்து வருகின்றன.


குற்றச்சாட்டு

சோழவரத்தை சுற்றியுள்ள குடியிருப்புகள், உணவகங்கள், உணவு தயாரிப்பு நிறுவனங்கள் ஆகியவற்றின் கழிவுநீர், டிராக்டர் மற்றும் லாரிகளில், இங்கு கொண்டு வந்து கொட்டப்படுகிறது.
அதேபோல், ரப்பர், பிளாஸ்டிக் நிறுவனங்களின் கழிவுகளும், இங்கு குவித்து எரிக்கப்படுகின்றன. இதனால், சமூக காட்டின் சுற்றுச்சூழல் பாதிப்படைந்து, மரம், செடிகள் கருகி வருகின்றன.

இது குறித்து, நம் நாளிதழில், பல்வேறு தருணங்களில் செய்திகள் வெளியாகியும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அதிகாரிகள் அலட்சியத்துடன் உள்ளனர்.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக, காட்டின் மையப்பகுதியில், சமூக விரோத கும்பல் ஒன்று, இரவு நேரங்களில் சவுடு மண் கொள்ளையில் ஈடுபட்டு வருகிறது. இதற்காக, அங்குள்ள மரம், செடிகள் வெட்டி அகற்றப்பட்டு உள்ளன.

பொக்லைன் இயந்திரம் உதவியுடன், 5 - 10 அடி ஆழத்திற்கு சவுடு மண்ணை வெட்டி, லாரிகளில் கட்டுமான பணிகள் நடைபெறும் இடங்களுக்கு கொண்டு சென்று விற்பனை செய்கின்றனர்.

ஒரு லோடு, 15,000 - 20,000 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. இதுவரை, 100க்கும் மேற்பட்ட லாரிகளில், சவுடு மண் அள்ளப் பட்டிருக்கிறது. இந்த மண் கொள்ளை குறித்து, உள்ளூர் போலீசார் மற்றும் வனத்துறையினருக்கு தெரிந்தும், அவர்கள் கண்டுகொள்ளாமல் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கேள்விக்குறி சுற்றுச்சூழலை பாதுகாக்கும் சமூக காட்டின் பல்வேறு பகுதிகளில், கனிமவளம் கபளீகரம் செய்யப்பட்டு வருவது, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் இடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறியதாவது:

பல்வேறு உயிரினங்கள் உள்ள இந்த சமூக காட்டை, வனத்துறை அதிகாரிகள் கண்காணிப்பதில்லை. கழிவுநீர், குப்பை கொட்டப்படுவது குறித்து, இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியமாக உள்ளனர்.

கழிவுநீர், குப்பை கொட்டுவதை தொடர்ந்து, தற்போது கனிமவளமும் சூறையாடப்படுகிறது. இதற்கும், எந்தவொரு நடவடிக்கையும் இல்லை. இதே நிலை தொடர்ந்தால், சமூக காட்டில் மரம், செடிகளின் எண்ணிக்கை படிப்படியாக குறையும்.

மேலும், பகல் நேரங்களில் காதல் ஜோடிகளும் இங்கு வந்து, விரும்பத்தகாத செயல்களில் ஈடுபடுகின்றனர். சமூக விரோதிகளால், அவர்களின் பாதுகாப்பும் கேள்விக் குறியாகி வருகிறது.

எனவே, மாவட்ட நிர்வாகம், வனத்துறை மற்றும் சோழவரம் காவல் துறையினருக்கு உரிய அறிவுறுத்தல்களை வழங்கி, கண்காணிப்பை தீவிரப் படுத்தி, அங்கு நடைபெறும் சமூக விரோத செயல்களை தடுக்க வேண்டும்.

அது மட்டுமின்றி, தொடர்ந்து சவுடு மண் கொள்ளையில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து, சமூக காட்டின் சுற்றுச்சூழலையும் பாதுகாக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement