பெங்களூரு காதலா... குஜராத் மாடலா; ஆமதாபாத்தில் இன்று விறுவிறு பைனல்
ஆமதாபாத்: பெங்களூரு அணி தொடர்ந்து இரண்டாவது முறையாக கோப்பை வெல்ல காத்திருக்கிறது. குஜராத் அணியும் பதிலடிக்கு தயாராக இருப்பதால், அனல் பறக்கும் பைனலை எதிர்பார்க்கலாம்.
வருடம் தோறும் கிரிக்கெட் லீக் தொடர் நடக்கிறது. 19வது சீசனில் சென்னை, கோல்கட்டா உள்ளிட்ட அணிகள் விரைவில் வெளியேறின. இன்று இரவு (மே 31) ஆமதாபாத்தின் மோடி மைதானத்தில் நடக்கும் பைனலில் 'நடப்பு சாம்பியன்' பெங்களூரு, குஜராத் அணிகள் மோதுகின்றன.
கோலி அனுபவம்: பெங்களூரு அணி, லீக் சுற்றில் முதலிடம் பிடித்தது. 'பிளே-ஆப்', தகுதிச் சுற்று-1ல் (மே 26), குஜராத் அணியை வீழ்த்தி, நேரடியாக பைனலுக்கு தகுதி பெற்றது. நான்கு நாள் ஓய்வுக்கு பின் பைனலில் உற்சாகமாக களமிறங்குகிறது. இம்முறை பல போட்டிகளில் 200+ ஸ்கோரை எளிதாக எட்டியது. இதற்கு துணிச்சலான பேட்டிங் முக்கிய காரணம்.
துவக்கத்தில் அனுபவ கோலி (600 ரன்), வெங்கடேஷ் ஐயர் விளாசுகின்றனர். விரல் காயத்தில் இருந்து மீண்ட பில் சால்ட் வாய்ப்பை எதிர்நோக்கி உள்ளார். 'மிடில் ஆர்டரில்' தேவ்தத் படிக்கல், ரஜத் படிதார் (486 ரன், ஸ்டிரைக் ரேட் 196.76), ஜிதேஷ் சர்மா உள்ளனர். தகுதிச் சுற்று-1ல், 33 பந்தில் 93 ரன் விளாசிய படிதார், கேப்டனாக 'கூலாக' செயல்படுவது பலம். கடைசி கட்ட அதிரடிக்கு டிம் டேவிட், குர்ணால் பாண்ட்யா உள்ளனர்.
பந்துவீச்சில் புவனேஷ்வர் குமார் (26 விக்.,), ஹேசல்வுட் (13), ரசிக் சலாம் (16), குர்ணால் பாண்ட்யா (13) மிரட்டுகின்றனர்.
சுதாரிப்பாரா சுதர்சன்: குஜராத் அணி லீக் சுற்றில் 2வது இடம் பெற்றது. தகுதிச் சுற்று-1ல் தோற்றது. தகுதிச் சுற்று-2ல் ராஜஸ்தானை வீழ்த்தி, பைனலுக்கு முன்னேறியது. தொடர்ந்து போட்டிகளில் பங்கேற்றதால், ஓய்வில்லாமல் பைனலில் களமிறங்க உள்ளது.
'டாப்-ஆர்டர்' பேட்டர்கள் கேப்டன் சுப்மன் கில் (722 ரன்), சாய் சுதர்சன் (710), பட்லர் (507) ரன் மழை பொழிகின்றனர். 'ஹிட் விக்கெட்' பலவீனத்தில் இருந்து சுதர்சன் மீள வேண்டும். 'மிடில் ஆர்டரில்' வாஷிங்டன் சுந்தர், ஹோல்டர், டிவாட்யா கைகொடுக்கலாம்.
பந்துவீச்சில் ரபாடா (28 விக்., 165 டாட் பால்), சிராஜ் (18 விக்., 162 டாட் பால்) மிரட்டுகின்றனர். ஒரு ரன் கூட கொடுக்காமல், அதிக 'டாட் பால்' வீசியுள்ளனர். தோள்பட்டை காயத்தால் சிராஜ் அவதிப்படுவது பின்னடைவு. ஹோல்டர், பிரசித் கிருஷ்ணா, 'ஸ்பின்னர்' ரஷித் கான் பலம் சேர்க்கின்றனர்.
யார் ஆதிக்கம்
கிரிக்கெட் லீக் அரங்கில் இரு அணிகளும் 9 போட்டிகளில் மோதின. பெங்களூரு 5, குஜராத் 4ல் வென்றன.
* இந்த சீசனில் 3 முறை மோதின. லீக் சுற்றில் தலா ஒரு வெற்றி பெற்றன. சின்னசாமி மைதானத்தில் பெங்களூரு வென்றது. ஆமதாபாத் மைதானத்தில் குஜராத் வென்றது. பின் தர்மசாலாவில் நடந்த தகுதிச் சுற்று-1ல் பெங்களூரு அணி (254/5), குஜராத்தை (162), 92 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இன்று பைனலில் மீண்டும் மோத உள்ளன.
மழை வருமா
ஆமதாபாத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு இல்லை.
* ஆடுகளம் பேட்டர்களுக்கு சாதகமானது.
சுப்மன் கோட்டையிலே
பைனல் நடக்கும் உலகின் பெரிய மோடி மைதானம் (ஆமதாபாத்), குஜராத் அணியின் சொந்த மண் என்பது சாதகம். இந்த சீசனில் 7 போட்டியில் 5ல் வென்றது. பைனலில் லட்சக்கணக்கான உள்ளூர் ரசிகர்கள் ஆதரவு அளிப்பர். இம்மைதானத்தில், கிரிக்கெட் லீக் அரங்கில் குஜராத் கேப்டன் சுப்மன் கில் 1,347 ரன் (31 போட்டி) எடுத்துள்ளார். ஆமதாபாத்தில் 2022ல் நடந்த பைனலில் குஜராத் அணி, ராஜஸ்தானை வீழ்த்தி, முதல் கோப்பை வென்றது. இதே 'மாடலில்' குஜராத் மீண்டும் சாதிக்க முயற்சிக்கலாம்.
தோனி, ரோகித் வழியில்
ஆமதாபாத்தில் 2025ல் நடந்த பைனலில் ரஜத் படிதார் தலைமையிலான பெங்களூரு, பஞ்சாப் அணியை வீழ்த்தி, முதல் கோப்பை கைப்பற்றியது. இம்முறை சாதித்தால், கிரிக்கெட் லீக் அரங்கில் தொடர்ந்து இரு முறை கோப்பை வென்ற கேப்டன்கள் தோனி (2010, 11), ரோகித் சர்மா (2019, 20) வரிசையில் படிதார் சேரலாம். கிரிக்கெட் 'காதலர்களான' பெங்களூரு ரசிகர்களும் இன்னொரு கோப்பையை கொண்டாட ஆர்வமாக உள்ளனர்.
ஈ ஸாலா கப்பும் நம்மிதே?
(சின்னசாமி ஸடேடியத்துல வெற்றிவிழா உண்டு தானே? )மேலும்
-
மேற்குவங்கத்தில் தொடரும் பரபரப்பு; மற்றொரு திரிணமுல் காங் எம்பி கல்யாண் பானர்ஜி மீது தாக்குதல்
-
தமிழக ஆசிரியருக்கு பிரதமர் மோடி பாராட்டு
-
வெப்பம் கடுமையாக இருப்பதால் கூடுதல் கவனம் அவசியம்; மன்கி பாத்தில் பிரதமர் மோடி அட்வைஸ்
-
இந்தியாவின் இறையாண்மையை பாதுகாப்பதில் உறுதி: புதிய முப்படை தலைமை தளபதி
-
ரூ.2 கோடி நில மோசடி 4 பேர் மீது வழக்கு
-
தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களில் அடுத்தடுத்து ஜாதி விரோதத்தில் அரிவாளால் வெட்டி தப்பிய கும்பல்