மேற்குவங்கத்தில் தொடரும் பரபரப்பு; மற்றொரு திரிணமுல் காங் எம்பி கல்யாண் பானர்ஜி மீது தாக்குதல்

28

கோல்கட்டா: மேற்குவங்கத்தில் அபிஷேக் பானர்ஜியைத் தொடர்ந்து,திரிணமுல் காங்கிரஸ் எம்.பி. கல்யாண் பானர்ஜி தாக்கப்பட்டதில், தலையில் காயம் ஏற்பட்டது. இதனால் தொடர்ந்து பரபரப்பு நீடிக்கிறது.

மேற்கு வங்கத்தில் ஆட்சி மாற்றம் நிகழ்ந்த பின்னர் அரசியல்ரீதியாக நாள்தோறும் ஏதேனும் சம்பவங்கள் நடந்து வருகின்றன. ஆளும் பாஜ அரசு மீது திரிணமுல் காங்கிரஸ் கட்சியினர் ஏதேனும் ஒரு குற்றச்சாட்டை நாள்தோறும் தெரிவித்து வருகின்றனர்.

நேற்றைய தினம், மம்தா பானர்ஜியின் மருமகன் அபிஷேக் பானர்ஜி தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள சோனாப்பூர் பகுதிக்கு தேர்தல் நேரத்தில் வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்தார். சாலையின் இருபுறமும் திரண்டிருந்த பெண்கள் உள்ளிட்ட பலர், அவர் மீது அழுகிய முட்டைகளையும், கற்களையும் வீசி தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவம் தொடர்பாக 5 பேரை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.

இந்நிலையில் இன்று (மே 31) அபிஷேக் பானர்ஜியைத் தொடர்ந்து,திரிணமுல் காங்கிரஸ் எம்.பி. கல்யாண் பானர்ஜி தாக்கப்பட்டதில், தலையில் காயம் ஏற்பட்டது. ஹூக்ளியில் உள்ள சண்டிதாலா போலீஸ் ஸ்டேஷனிற்கு வெளியே திரிணமுல் காங்கிரஸ் மற்றும் பாஜ தொண்டர்கள் மோதிக்கொண்டதில், கல்யாண் பானர்ஜி பலத்த காயம் அடைந்தார். அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டது.



மம்தா கண்டனம்!



அபிஷேக் பானர்ஜி கோல்கட்டாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அவரை சந்தித்து நலம் விசாரிக்க மம்தா அங்கு சென்றார்.

இதனைத் தொடர்ந்து அந்த மருத்துவமனை தலைமை நிர்வாக அதிகாரியை மம்தா பானர்ஜி கடுமையாக சாடிய வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன. எதற்காக அவர் விமர்சனம் என்றார் என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை.

அந்த வீடியோவில் பதிவான காட்சிகளில் மம்தா கூறியதாவது: நாங்கள் உங்களுக்குச் செய்த உதவியை நினைவில் கொள்ளுங்கள். கடவுள் உங்களை மன்னிக்க மாட்டார். நீங்கள் தவறாக வழிநடத்தப்படுகிறீர்கள். நீங்கள் வெட்கப்பட வேண்டும். உங்கள் ஆணவத்தை எல்லோரும் நினைவில் கொள்வார்கள். நீங்கள் மருத்துவமனையை நடத்துகிறீர்கள், பாஜக ஆட்சியில் உள்ளது. நாளை மத்திய அரசு இல்லையென்றால், நாங்கள் பார்த்துக்கொள்வோம். இவ்வாறு மம்தா கூறியுள்ளார்.

Advertisement