மொட்டை அடிக்க பணம் வசூலித்தால் நாவிதர்களின் ஊக்கத்தொகை நிறுத்தம்; திருத்தணி கோவில் இணை ஆணையர் எச்சரிக்கை

2

திருத்தணி: “முருகன் கோவிலில் மொட்டை அடிக்க வரும் பக்தர்களிடம், நாவிதர்கள் பணம் வசூலித்தால், அவர்களுக்கு வழங்கப்படும் பங்களிப்பு மற்றும் ஊக்கத் தொகை நிறுத்தப்படும்,” என, கோவில் இணை ஆணையர் ரமணி எச்சரித்துள்ளார்.

திருத்தணி முருகன் கோவிலில், பக்தர்கள் தங்களது முடி காணிக்கை செலுத்துவதற்கு வசதியாக, படாசெட்டி குளம் அருகே, 1 கோடி மதிப்பில், இரண்டு அடுக்கு கட்டடம் கட்டி பயன்பாட்டிற்கு விடப்பட்டுள்ளது.

அங்கு, பக்தர்கள் குளியல் அறை மற்றும் கழிப்பறை போன்ற வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. கோவில் நிர்வாகம் சார்பில், பக்தர்களுக்கு இலவசமாக மொட்டை அடிக்கப்பட்டு வருகிறது.

ஆனால், மொட்டை அடிக்கும் நாவிதர்கள், பக்தர்களிடம் 50 முதல் 100 ரூபாய் தருமாறு, கட்டாய வசூலில் ஈடுபட்டு வருவதாக, கோவில் நிர்வாகத்திற்கு புகார் சென்றது.

இதையடுத்து, கோவில் இணை ஆணையர் ரமணி, கண்காணிப்பாளர் சித்ரா ஆகியோர், நேற்று மொட்டை அடிக்கும் மண்டபத்தில், திடீர் சோதனை செய்தனர்.

அப்போது, பக்தர்களிடம் பணம் பெற்ற, நான்கு நாவிதர்களை கண்டித் தனர். அவர்களுக்கு கோவில் சார்பில் வழங்கப்படும் மாதாந்திர ஊக்கத் தொகை மற்றும் மொட்டை அடிக்கும் டிக்கெட் மூலம் வழங் கப்படும், 30 ரூபாய் பங்களிப்பு தொகை நிறுத்தப்பட்டது.

மேலும், மறு உத்தரவு வரும் வரை, அவர்கள் மொட்டை அடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது .

இது குறித்து, திருத்தணி கோவில் இணை ஆணையர் ரமணி கூறியதாவது:

முருகன் கோவிலில், மொட்டை அடிப்பதற்கு திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் நாவிதர் முடிதிருத்தம் சங்கம் மூலம், ஹிந்து அறநிலை துறை ஆணையரின் உத்தரவு மற்றும் அங்கீகாரம் பெற்ற, 30 நாவிதர்கள் பணியில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர்.

இவர்களுக்கு, கோவில் நிர்வாகம் சார்பில், மாதந்தோறும் 5,000 ஊக்கத் தொகையும், ஒரு மொட்டை அடித்தால், 30 ரூபாய் பங்களிப்பு தொகையும் வழங்கப்பட்டு வருகிறது. பக்தர்களிடம் நாவிதர்கள் கட்டாய வசூலில் ஈடுபடக்கூ டாது என, பலமுறை எச்சரித்து வருகிறோம்.

ஆனால், மொட்டை அடிக்கும் மண்டபத்தில் ஆய்வு செய்த போது, நான்கு நாவிதர்கள் பக்தர்களிடம் கட்டாய வசூலில் ஈடுபட்டது தெரிந்தது. அவர்களை மண்டபத்தில் இருந்து வெளியே செல்லுமாறு உத்தரவிட்டோம்.

இவர்களின் செயல்கள் குறித்து, ஹிந்து அறநிலைய துறையின் ஆணையருக்கு புகார் கடிதம் அனுப்பப்படும். மேலும், அந்த நாவிதர்களுக்கான ஊக்கத் தொகை, பங்களிப்பு தொகை ஆகியவை, ஆணையரின் மறு உத்தரவு வரும் வரை நிறுத்தி வைக்கப்படுகிறது.

மேலும், இவர்களை பணியிடை நீக்கம் செய்வதா, மீண்டும் பணியில் சேர்ப்பதா என்பது குறித்து, ஆணையர் தான் முடிவெடுக்க வேண்டும். இனிவரும் காலங்களில், நாவிதர்கள் பக்தர்களிடம் கட்டாய வசூலில் ஈடுபட்டால், ஊக்கத் தொகை மற்றும் பங்களிப்பு தொகை நிறுத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement