மஹா மாரியம்மன் கோவில் திருவிழா கோலாகலம்
குளித்தலை:குளித்தலை அடுத்த கழுகூர் பஞ்., ஸ்ரீமூட்டக்காம்பட்டி கே.துறையூரில் சித்தி விநாயகர், மஹா மாரியம்மன், பாலமுருகன் கோவில்கள் அமைந்துள்ளன. இக்கோவில் திருவிழா ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.
இந்தாண்டுக்கான திருவிழா, கடந்த, 29ல் காப்பு கட்டுதல், முகூர்த்தகால் நடுதலுடன் துங்கியது. அன்று இரவு, 9:00 மணிக்கு பூச்சொரிதல் விழா நடந்தது.
திருவிழாவின் முதல் நாள் அன்று காலை, காவிரி நதியில் இருந்து பால், தீர்த்தக்குடம் எடுத்துக்கொண்டு மேளதாளம் முழங்க, ஊர்வலமாக சென்றனர். தொடர்ந்து, சித்தி விநாயகர், மஹா மாரியம்மன், பாலமுருகன் ஆகிய மூலவர் சுவாமிகளுக்கு, 16 வகையான அபிஷேகம் செய்து வழிபட்டனர். அன்று இரவு, கோவில் கங்கையில் மஹா மாரியம்மனுக்கு கரகம் பாலித்து, வாணவேடிக்கையுடன் முத்து பல்லக்கில் திருவீதி உலா நடந்தது.
இரண்டாம் நாள் திருவிழாவில், மஹா மாரியம்மனுக்கு பொங்கல் வைத்தல், மாவிளக்கு எடுத்தல், கிடா வெட்டுதல், மொட்டை அடித்தல் உள்பட பல்வேறு நேர்த்திக்கடன் செய்து பக்தர்கள் வழிபட்டனர். 3ம் நாளான நேற்று, கரும்புள்ளி செம்புள்ளி குத்திக்கொண்டு, வீதிவீதியாக பல்வேறு அம்மன் பாடல்களை பாடிக்கொண்டு ஊர்வலமாக சென்றனர். பெண்கள், முளைப்பாரிகை எடுத்துக்கொண்டும், மஞ்சள் நீராட்டுடன் மஹா மாரியம்மன் கரகம் கோவில் கங்கையில் விடப்பட்டது. அனைத்து சுவாமிகளுக்கு விடையாற்றி நிகழ்ச்சி நடத்தி திரு
விழாவை முடித்து வைத்தனர்.