குடும்பத்தினர் பாசமே பெண்ணுக்கு தடையாக கூடாது!



புற்றுநோய் மற்றும் விண்வெளி மருத்துவம் தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டு வரும், தேனி மாவட்டம், போடிநாயக்கனுாரைச் சேர்ந்த பேராசிரியை சுவாதி:

பிளஸ் 2வில் கணினி அறிவியல் எடுத்து படித்திருந்தாலும், எனக்கு உயிரியல் பாடத்தில் தான் ஆர்வம் அதிகம். அதனால், கல்லுாரி படிப்பில் தொழில்துறை நுண்ணுயிரியல் பிரிவில் சேர்ந்தேன். எங்கள் குடும்பத்தில் நான் தான் முதல் பட்டதாரி. அகில இந்திய அளவில் நடக்கும், 'பயோ - டெக்னாலஜி' துறைக்கான நுழைவுத்தேர்வில் இரண்டாவது இடம் பெற்றதால், சென்னை அண்ணா பல்கலையில் இடம் கிடைத்தது.

இப்போது, சென்னை ஐ.ஐ.டி.,யில் பேராசிரியையாக இருந்தபடியே, புற்றுநோய் மற்றும் விண்வெளி மருத்துவம் தொடர்பாக ஆராய்ச்சி செய்து வருகிறேன்.

திருமணத்திற்கு பின் கணவர் எனக்கு பக்கபலமாக இருந்து வருகிறார். தற்போது, ஆராய்ச்சிக்காக பல வெளிநாடுகளுக்கும் சென்று வருகிறேன். புது வாய்ப்புகள் வரும்போது பயப்படவோ, தயங்கவோ மாட்டேன். ஜெர்மனியில் ஆராய்ச்சி படிப்புக்கான வாய்ப்பு வந்தது. அதற்கு முன் நான் விமானத்தில் சென்றதே இல்லை.

ஜெர்மன் மொழி குறித்தோ, அந்நாட்டின் கலாசாரம் குறித்தோ எதுவுமே தெரியாது. ஆனாலும், அந்நாட்டிற்கு தைரியமாக சென்று, படித்து மூன்றே ஆண்டுகளில் முனைவர் பட்டம் வாங்கினேன்.

தற்போது, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான, 'இஸ்ரோ'வுடன் இணைந்து, 'ஸ்பேஸ் மெடிசன்' எனும் விண்வெளி மருத்துவ துறையில் முக்கியமான ஆய்வை மேற்கொண்டு வருகிறேன். இதன் வாயிலாக, விண்வெளிக்கு செல்லும் வீரர்களுக்கு எலும்பின் அடர்த்தி குறைதல், இதய பாதிப்பு, நோய் எதிர்ப்பு சக்தி குறைவு போன்ற பல சிக்கல்களை தடுக்கும் மருந்துகளை உருவாக்கி உள்ளோம். ஊசி போட தேவையில்லை; மாத்திரை அல்லது திரவ வடிவிலேயே எடுத்துக் கொள்ளலாம். என் குழுவில், 25 பேர் பணியாற்றுகின்றனர். புற்றுநோய் சிகிச்சையில் பக்கவிளைவு இல்லாத முறையையும் உருவாக்கி வருகிறேன்.

'சாதாரண பின்னணியில் உள்ளோம்; குடும்ப சூழ்நிலை சரியில்லை. அரசு பள்ளியில் படித்திருக்கிறோம்' என்று, பலருக்கு தயக்கமும் பயமும் இருக்கும்.

அவர்களுக்கு நான் ஒரு முன்னுதாரணமாக இருக்க விரும்புகிறேன். சுற்றி இருக்கும் சூழல் எப்படி இருந்தாலும், நம் லட்சியத்தில் உறுதியாக இருந்தாலே போதும்.

முக்கியமாக, பெண் குழந்தைகள் மீது பெற்றோர் பயத்துடன் இருப்பது இன்றும் தொடர்கிறது. பெற்றோர் தான் தைரியம் சொல்லி, பெண்களை கல்வி கற்க வெளியில் அனுப்ப வேண்டும். குடும்பத்தின் அன்பும், பாசமும் பெண்ணின் முன்னேற்றத்துக்கு தடையாகிவிடக் கூடாது.

***

Advertisement