பிரதமர் அலுவலக ரகசியம் கசிந்தது; அதிகாரிக்கு வேலை காலி!

11

பத்திரிகையாளர்கள், குறிப்பாக டில்லியில் பணியாற்றுபவர்கள் எப்போதுமே எக்ஸ்குளூசிவ் செய்திக்காக காத்திருப்பர். இதற்காக சில அதிகாரிகளையும் ஆட்சியில் இருக்கும் அரசியல்வாதிகளையும் நெருக்கமாக அறிந்து வைத்திருப்பார்கள்.

அரசு எடுக்கும் முக்கிய முடிவுகள் முதலில் இந்த நெருக்கமான பத்திரிகையாளர்களுக்குத்தான் வரும். சில சமயம் நெருக்கமான பத்திரிகையாளருக்கு கிடைக்காமல் வேறொருவருக்கு இந்த செய்தி கிடைத்தால் என்னாகும்? இது தொடர்பான ஒரு நிகழ்வு. இன்னொன்று ஒரு செய்தியை கசிய விட்டதால் அதிகாரிக்கு ஏற்பட்ட பிரச்னை ஆகிய இரண்டும் இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

நரசிம்மராவ்



தமிழகத்தின் ஶ்ரீபெரும்புதூரில் தேர்தல் பிரசாரத்தின் போது விடுதலைப்புலிகளால், முன்னாள் பிரதமர் ராஜிவ் 1991 மே மாதம் கொல்லப்பட்டார். தொடர்ந்து நடந்த பார்லிமெண்ட் தேர்தலில் காங் வெற்றி பெற்றாலும் போதிய மெஜாரிட்டி கிடைக்கவில்லை. இந்நிலையில் ஆந்திராவைச் சேர்ந்த நரசிம்ம ராவ் பிரதமரானார். சிறுபான்மை அரசானாலும் கூட்டணிக் கட்சிகள் ஆதரவுடன் 5 ஆண்டுகள் ஆட்சி செய்தார்.

இவருடைய ஆட்சிக்காலத்தில்தான் 'லைசென்ஸ் ராஜ்' எனப்படும் கடுமையான அரசு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. தொழில் தொடங்க அனுமதி வாங்குவது எளிதாக்கப்பட்டது. அரசு வசம் மட்டுமே இருந்த பல துறைகளில் தனியார் முதலீட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டது. பொதுத்துறை நிறுவன பங்குகள் விற்கப்பட்டன. சர்வதேச நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்யவும் இந்திய சந்தையில் வர்த்தகம் செய்யவும் கதவுகள் திறக்கப்பட்டன. இறக்குமதி வரிகள் கணிசமாகக் குறைக்கப்பட்டன.

நெருக்கமான பத்திரிகையாளர்

டில்லியிலிருந்து வெளியாகும் பிரபல தினசரியின் அரசியல் பகுதிக்கு ஆசிரியராக இருந்தவர் ஒருவர். இவருக்கும் நரசிம்ம ராவிற்கும் நல்ல பழக்கம். பொதுவாக பிரதமர் வீட்டிற்கு யார் கார் சென்றாலும் அது முற்றிலுமாக சோதிக்கப்பட்ட பின்னர்தான் அனுமதிக்கப்படும். இப்போது நிலைமை மாறிவிட்டது. பிரதமர் அலுவலகத்திற்கு வருபவர்கள் தங்கள் கார்களை விட்டு இறங்கி எஸ்.பி.ஜி என்கிற பிரதமரின் பாதுகாப்புக்கான அமைப்பு தரும் காரில்தான் உள்ளே செல்ல முடியும்.

ஆனால் நரசிம்ம ராவ் காலத்தில் இப்படி கிடையாது. ஆனாலும் கார்கள் செக் செய்யப்பட்டன. ஆனால் இந்த சீனியர் நிருபரின் கார் எந்தவித சோதனையும் இல்லாமல் நேரடியாக பிரதமர் இல்லத்தின் உள்ளே செல்லும். இந்த சீனியர் பத்திரிகையாளர் அலுவலகத்தில் இருக்கும் போது பிரதமர் நரசிம்ம ராவே நேரடியாக இவருக்கு போன் செய்து பேசுவாராம். அப்போது மொபைல் போன் கிடையாது. எல்லாமே சாதாரண லேண்ட் லைன் போன். இந்த அளவிற்கு பிரதமருடன் நட்பில் இருந்தார் அந்த பத்திரிகையாளர்.

இதனால் அரசு எடுக்கும் முக்கிய முடிவுகள் முதலில் இவருக்குத்தான் கிடைக்கும். உடனே இது அவரது ஆங்கில தினசரியில் வெளியாகும். இப்படி பல எக்ஸ்குளூசிவ் செய்திகளை கொடுத்துக்கொண்டே இருந்தார். இது மற்ற தினசரிகளில் பணியாற்றும் பத்திரிகையாளர்களை கலங்கடித்தது.

புதிய தொழில் கொள்கை

இந்திய பொருளாதாரத்தை சீர் செய்ய தீர்மானித்தார் நரசிம்ம ராவ். இதற்காக ஒரு அதிரடி மாற்றத்தைக் கொண்டு வந்தார். 1956ம் ஆண்டின் தொழில் கொள்கையைத்தான் மத்திய அரசு பின்பற்றி வந்தது. இதன் மூலம் பொருளாதாரத்தின் முழுக் கட்டுப்பாடும் அரசிடமே இருந்தது. கடுமையான அரசாங்க அதிகாரத்துவக் கட்டுப்பாடுகளையும் (Red tape) விதித்திருந்தது.

இந்த கொள்கையை முற்றிலுமாக மாற்றி அமைத்தார் நரசிம்ம ராவ். அப்போது நிதி அமைச்சராக இருந்த மன்மோகன் சிங்குடன் ஆலோசனை நடத்தி இந்த புதிய தொழில் கொள்கையை தயார் செய்தார். உடனே இந்த புதிய கொள்கை வெளிவருவதற்கு முன் தனது நண்பரான பத்திரிகையாளருக்கு அந்த கொள்கையின் விவரங்கள் அடங்கிய பேப்பர்களை கொடுத்தார் ராவ். அப்போது இண்டர்நெட் பிரபலமாகவில்லை.

எனவே இந்த புதிய கொள்கையின் நகல்கள் நான்கு பேரிடம்தான் இருந்தன. ஒருவர் பிரதமர், அடுத்து கேபினட் செயலர், நிதி அமைச்சர் கடைசியாக ராவின் சிறப்பு அதிகாரி. அப்போது இளைஞராக இருந்த இவர் இப்போது காங்கிரசில் ஒரு சீனியர்.இந்த சிறப்பு அதிகாரி அதிரடியாக பணியாற்றக் கூடியவர். ஐஐடியில் இன்ஜினீயரிங் படித்தவர். பிறகு அமெரிக்காவில் மேல்படிப்பு. ராவ் பங்குபெறும் ஆலோசனைக் கூட்டங்களில் பேசுவதை நோட்ஸ் எடுத்து உடனடியாக டைப் செய்து பிரதமரிடம் கொடுப்பார். அந்த அளவிற்கு சுறுசுறுப்பு.

நம்பிக்கை நொறுங்கியது

இந்திய பொருளாதாரத்தையே மாற்றும் மத்திய அரசின் முக்கிய கொள்கையின் வரைவு ஆவணங்கள் கிடைத்ததால் ராவின் பத்திரிகையாளர் நண்பருக்கோ ஏக குஷி. ஞாயிற்றுக்கிழமையன்று முதல் பக்கத்தில் பெரிய எக்ஸ்குளூசிவ் செய்தியாக போட தயாரானார். அந்த கொள்கையை படித்து வாசகர்கள் புரிந்து கொள்ளும்படியாக எழுதி ரிப்போர்ட்டை தயாரித்துவிட்டார். ஞாயிற்றுக்கிழமை அதிக பிரதிகள் விற்கும்..அத்தோடு லட்சக்கணக்கில் வாசகர்கள் படிப்பார்கள் என்பதால் ஞாயிறைத் தேர்ந்தெடுத்தார்.

இந்த புதிய தொழில் கொள்கை விவரங்கள் எந்த ஒரு பத்திரிகையாளரிடமும் இல்லை என்பதால் எந்த ஒரு தினசரியிலும் வராது என்கிற நம்பிக்கையில் இருந்தார். சனிக்கிழமை காலை எழுந்தவருக்கு அதிர்ச்சி. மத்திய அரசின் புதிய தொழில் கொள்கை புதிதாக தொடங்கப்பட்ட ஒரு தினசரியில் வெளியாகி இருந்தது.

தன்னிடம்தான் அந்த கொள்கையின் நகல் இருந்தது என நினைத்து ஞாயிற்றுக்கிழமைக்காக காத்திருந்தவருக்கு கோபம் கொப்பளித்தது. உடனே பிரதமருக்கு போன் செய்து தன் கோபத்தை பகிர்ந்து கொண்டார். பிரதமருக்கும் ஷாக். எப்படி இந்த விஷயம் வெளியே போனது என விசாரிக்க தொடங்கினார்.

கல்தா




பிரதமரின் சிறப்பு அதிகாரியாக பணியாற்றிய அந்த இளைஞர் ஒரு சபலிஸ்ட். பெண்களைக் கண்டால் வழியக்கூடியவர். ஒரு இளம் நிருபர் இந்த அதிகாரியை சந்தித்து பேசியதும், மகிழ்ந்து போன அவர் புதிய தொழில் கொள்கை விவரங்களை அள்ளிக்கொடுத்து விட்டார்.

பெரிய எக்ஸ்குளூசிவ் கிடைத்துவிட்டது, இனி தாமதம் செய்யக்கூடாது என்பதால் உடனடியாக மறுநாளே தன் தினசரியில் பிரசுரித்து பெயர் வாங்கிவிட்டார் அந்த இளம் பெண் நிருபர். விசாரணையில் இந்த விவரம் தெரிய வந்தது. உடனே தன் சிறப்பு அதிகாரியை வேலையை விட்டு தூக்கிவிட்டார் பிரதமர் ராவ். அந்த இளம் அதிகாரி இப்போது காங்கிரசில் ஒரு சீனியர், அத்தோடு ராகுலுக்கு மிகவும் நெருக்கம்.

சைவம்

இது இன்னொரு விவிஐபியைப் பற்றியது. இந்த விவிஐபி பதவிக்கு வந்த புதிது. இவர் பயணிக்க தனி விமானம் உண்டு. இதுவரை இந்த விமானத்தில் பயணித்த விவிஐபிக்கள் மற்றும் அவருடன் பயணிப்பவர்களின் வசதிக்காக அசைவ உணவு, சோம பானம் என பல விஷயங்கள் விமானத்தில் உண்டு. விவகாரம் என்னவென்றால் பயணிக்கும் விவிஐபி அதிகமாக எதுவுமே சாப்பிடமாட்டார். ஆனால் உடன் வரும் பட்டாளம் அனைத்தையுமே ஒரு கை பிடிக்கும்.

புதிதாக வந்தவருக்கு இதில் எதிலுமே விருப்பம் கிடையாது. தன் அலுவலகத்தில் இருந்த ஒரு சீனியர் ஐஏஎஸ் அதிகாரியை அழைத்தார் அந்த விவிஐபி. இந்த அதிகாரியின் பதவிக்காலம் முடிவடைந்து பதவி நீட்டிப்பில் இருந்தார். இவருக்கு பதவி நீட்டிப்பு அளித்தது முன்னர் பதவியில் இருந்த விவிஐபி.

இனிமேல் நான் பயணிக்கும் விமானத்தில் வெறும் சைவ உணவுதான்; எந்தவித சோமபான சரக்கும் விமானத்திற்குள் வரக்கூடாது என அந்த அதிகாரியிடம் சொல்லி ஒரு நோட் தயார் செய்ய சொன்னார் விவிஐபி.

கசிந்த ரகசியம்

என் நண்பரும் சீனியர் பத்திரிகையாளருமான ஒருவருக்கு அந்த ஐஏஎஸ் அதிகாரி நல்ல நண்பர். அவரை சந்திக்க அவருடைய அலுவலகத்திற்கு சென்றார் நண்பர்.சிறிது நேரம் அரசியல் தொடர்பான பேச்சு முடிந்த உடன அந்த ஐஏஎஸ் அதிகாரி சொன்னார். 'வெறும் சைவம்தான் விமானத்தில் பயணிக்குமாம், வேறு எதுவும் கூடாதாம், காலம் காலமாக இருந்ததை இப்போது மாற்ற விரும்புகிறார்' என நொந்து போய் நம் நண்பரிடம் சொன்னதோடு அந்த நோட்டையும் காட்டினார் அதிகாரி.

அந்த நோட்டில் இருந்ததை முழுவதுமாக படித்துக்கொண்டார் நண்பர். உடனே அவரது மூளை வேலை செய்ய ஆரம்பித்துவிட்டது. மிகவும் டாப் எக்ஸ்குளூசிவ் நியூஸ் என மனதிற்குள் சொல்லிக்கொண்டார். பிறகு அதிகாரியிடம் விடைபெற்றுக் கொண்டு வெளியே வந்துவிட்டார். பொதுவாக அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் பத்திரிகையாளர்களிடம் மிகவும் கவனமாக நடந்து கொள்வார்கள். ஏதாவது ஒன்றைச் சொல்ல பத்திரிகையில் வருவது வேறு ஒன்றாக இருக்கும். இதனால் மிகவும் நிதானத்துடன் செயல்படுவார்கள் அரசியல்வாதிகளும் அதிகாரிகளும்.

செய்தி போட வேண்டாம் என சொன்னாலே நமது நண்பர் கேட்கமாட்டார். அதுவும் விவிஐபி தொடர்பான செய்தி என்றால் கேட்கவே வேண்டாம். அதிகாரியின் அறையை விட்டு வெளியே வந்த அடுத்த ஒரு மணி நேரத்தில் ஒரு நியூஸ் வெப் சைட்டிற்கு செய்தியை எழுதி அனுப்பிவிட்டார். அதுவும் வெப் சைட்டில் வெளியாகி பிரபலமானது.

வேலை போனது


சைவ செய்தி வெளியானதும் விவிஐபிக்கு விஷயம் தெரிந்துவிட்டது. அலுவலகத்திலிருந்த அந்த சீனியர் அதிகாரியை அழைத்தார். 'இந்த விவகாரம் எனக்கும் உங்களுக்கும் மட்டும்தான் தெரியும், அப்படியிருக்க எப்படி இந்த செய்தி வெளியே போனது' என கேட்டார். அதிகாரியோ, 'எனக்கும் செய்தி வெளியானதற்கும் எந்த தொடர்பும் இல்லை' என மறுத்தார். ஆனால் விவிஐபி அதை நம்பவில்லை.

அதிகாரியை யார் சந்தித்தார் என்கிற விவரம் அவருக்கு சொல்லப்பட்டது. அடுத்த நாள் அந்த அதிகாரிக்கு ஒரு உத்தரவு வந்தது. 'உங்களுடைய பதவி நீட்டிப்பு நிறுத்தப்படுகிறது. இனிமேல் நீங்கள் வேலைக்கு வர வேண்டாம்' என்பது தான் உத்தரவு. அதிர்ந்து போனார் அதிகாரி. முதலில் சொன்ன செய்தி கசிவு, அரசியல் பிரமுகருக்கு வேட்டு வைக்க, இந்த இரண்டாவது விவகாரம் அதிகாரியின் வேலையை காவு வாங்கிவிட்டது.

Advertisement