அப்பாடா!ஒருவழியாக நடந்தது மாநில ஜி.எஸ்.டி. கூட்டம்: எம்.எஸ்.எம்.இ. நிறுவனத்தினர் சந்தோஷம்

கோவை: எம்.எஸ்.எம்.இ., நிறுவனங்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, மாநில வணிகவரித்துறையினர் கலந்தாய்வு கூட்டம் நடத்தினர். இதனால் மகிழ்ச்சி அடைந்துள்ள தொழில்துறையினர், இது தொடர வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். மத்திய, மாநில ஜி.எஸ்.டி. துறை சார்ந்து, தொழில்துறைக்கு ஏராளமான முறையீடுகள் உள்ளன. மத்திய ஜி.எஸ்.டி. தரப்பில் மாதம்தோறும் குறைதீர் கூட்டம் நடத்தப்படுகிறது.

ஆனால், மாநில ஜி.எஸ்.டி. தரப்பில் அவ்வாறு ஒரு கூட்டம் நடத்தப்படுவதே இல்லை. மூன்றாண்டுகளுக்கு முன் ஒரு முறை மட்டும், பெயரளவுக்கு ஒரு கலந்தாய்வு கூட்டம் நடத்தப்பட்டது.

இதுதொடர்பாக தொழில் அமைப்புகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன. இந்நிலையில், மாநில ஜி.எஸ்.டி. கோவை மண்டல இணை ஆணையர் தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ் தலைமையில், முதன்முறையாக எம்.எஸ்.எம்.இ. நிறுவனங்களுக்கான குறைதீர் கூட்டம் பாலசுந்தரம் ரோட்டில் உள்ள வணிகவரித்துறை அலுவலகத்தில் நடந்தது.

இதில், மாநில ஜி.எஸ்.டி. சார்பில், 3 மாதங்களுக்கு ஒரு முறை குறைதீர் கூட்டம் தொடர்ந்து நடத்த வேண்டும், மாநில வணிகவரித்துறை அமைச்சர் தலைமையில் கோவையில் கலந்தாய்வுக் கூட்டம் நடத்த வேண்டும், என தொழில்துறையினர் வலியுறுத்தினர்.

கொடிசியா, டேக்ட், சியா உள்ளிட்ட தொழில் அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். இணை ஆணையர் சுதா மற்றும் துணை, உதவி ஆணையர்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதியளித்தனர்.

@block_B@

த.வெ.க.ஆட்சியில் நிறைவேறிய கோரிக்கை

'ஜி.எஸ்.டி., அமலானதில் இருந்து மாநில ஜி.எஸ்.டி., துறையினர் கூட்டம் நடத்த வேண்டும் என தொடர்ந்து கேட்டு வருகிறோம். அ.தி.மு.க., தி.மு.க., ஆட்சிக்காலத்தில் அமைச்சர்களிடமும் கோரிக்கை விடுத்தோம். எவ்வித பயனுமில்லை. மத்திய ஜி.எஸ்.டி.,யை விட, மாநில ஜி.எஸ்.டி., அதிகாரிகள் தேவையற்ற கெடுபிடி அளிப்பதாக முதல்வர் வரை புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. த.வெ.க., ஆட்சியில் முதன்முறையாக, ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. இது தொடர்ந்தால், தொழில்துறையினரின் சிக்கல்களுக்கு தீர்வு கிடைக்கும். அரசு பரிசீலிக்க வேண்டும்' என தொழில்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.block_B

@block_B@

எம்.எஸ்.எம்.இ., கோரிக்கைகள்

 தொழில் நிறுவனங்களின் கணக்குகள் அதிகபட்சம் 3 ஆண்டுகளுக்குள் சரிபார்க்கப்பட்டு, அதற்கான தடையின்மைச் சான்று வழங்க வேண்டும்.  ரூ.1 கோடிக்கும் குறைவாக ஆண்டு வருவாய் உள்ள குறு நிறுவனங்களை தனிப்பிரிவாக வகைப்படுத்தி, அந்நிறுவனங்களின் பிரச்னைகளுக்கு துரித தீர்வு காண வேண்டும்.  2017ம் ஆண்டுக்கு முன் 'வாட்' வரி அமலில் இருந்தது. 2017 மற்றும் அதற்கு முந்தைய கால கணக்குகளுக்கு சுமார் 10 ஆண்டுகள் ஆன கணக்குகளுக்கு இப்போது நோட்டீஸ் அனுப்புவதை தவிர்க்க வேண்டும்.  வணிகர்கள், தொழில்முனைவோர் மற்றும் உற்பத்தியாளர்கள் செய்யும் சிறிய தவறுகளுக்குக் கூட அதிக அபராதம் விதிக்கப்படுகிறது. இதை மறுபரிசீலனை செய்து, தொழில் வளர்ச்சிக்கு உகந்த எளிய நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டும்.block_B

Advertisement