கர்நாடக முதல்வராக சிவகுமார் பதவியேற்பு துணை முதல்வராக பரமேஸ்வர் நியமனம்

1

பெங்களூரு: கர்நாடக முதல்வராக சிவகுமார் நேற்று பதவியேற்றார். துணை முதல்வராக பரமேஸ்வரும், 12 அமைச்சர்களும் பொறுப்பேற்று கொண்டனர்.

கர்நாடக காங்., அரசில் முதல்வராக இருந்த சித்தராமையாவின் ராஜினாமாவை தொடர்ந்து, புதிய முதல்வராக, மாநில காங்., தலைவர் சிவகுமார் தேர்வு செய்யப்பட்டார். இவரது பதவியேற்பு விழா, பெங்களூரு லோக் பவனில் நேற்று மாலை 4:00 மணிக்கு நடந்தது.

கவர்னர் தாவர்சந்த் கெலாட், சிவகுமாருக்கு பதவி பிரமாணமும், ரகசிய காப்பு உறுதி மொழியும் செய்து வைத்தார். இந்திய அரசியலமைப்பு புத்தகத்தை கையில் பிடித்தபடி, கர்நாடகாவின், 25வது முதல்வராக சிவகுமார் பதவியேற்றுக் கொண்டார்.

தலைமை நீதிபதி தொடர்ந்து, காங்கிரஸ் மூத்த தலைவர் பரமேஸ்வர், துணை முதல்வராக பதவியேற்று கொண்டார். அடுத்து, முனியப்பா, ஜார்ஜ், எம்.பி.பாட்டீல், ராமலிங்கரெட்டி, சதீஷ் ஜார்கிஹோளி, கிருஷ்ண பைரே கவுடா, பிரியங்க் கார்கே, காதர், ஈஸ்வர் கன்ட்ரே, யதீந்திரா, பைரதி சுரேஷ், சரண பிரகாஷ் பாட்டீல் ஆகிய, 12 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர்.

கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி விபு பக்ரு, லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல், காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் முதல்வர் சித்தராமையா, காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் ஹிமாச்சல பிரதேசம் - சுக்விந்தர் சிங் சுகு, தெலுங்கானா - ரேவந்த் ரெட்டி, கேரளா - சதீசன், காங்கிரஸ் பொதுச் செயலர் வேணுகோபால் உள்ளிட்ட பலரும் விழாவில் பங்கேற்றனர்.

மோடி வாழ்த்து பிரதமர் மோடியின், 'எக்ஸ்' பதிவில், 'கர்நாடக முதல்வராக பதவியேற்ற சிவகுமாருக்கு வாழ்த்துகள்; அவரது பதவி காலம் சிறப்பாக அமையட்டும். மக்கள் நலனுக்காக கர்நாடக அரசுடன் இணைந்து மத்திய அரசு செயல்படும்' என தெரிவித்துள்ளார்.

முதல்வராக பதவியேற்கும் முன், நேற்று காலை சிவகுமார், எதிர்க்கட்சி தலைவர்களான முன்னாள் பிரதமர் தேவ கவுடா, முன்னாள் முதல்வர் எடியூரப்பா ஆகியோரின் வீடுகளுக்கு சென்று, அவர்களிடம் ஆசி பெற்றார்.

கர்நாடகாவில் முதல்வர் உட்பட, 34 அமைச்சர்கள் இடம்பெறலாம். இன்னும், 20 இடங்கள் காலியாக உள்ளன. சில நாட்களில், 20 இடங்க ளும் நிரப்பப்பட உள்ளன.

தமிழருக்கு பதவி முதல்வர் சிவகுமாரின் செயலராக மதுரையைச் சேர்ந்த தமிழரான ஐ.ஏ.எஸ்., அதிகாரி ராஜேந்திர சோழன் நியமிக்கப்பட்டு உள்ளார்.

சிவகுமார், துணை முதல்வராக பதவி வகித்த போது, அவரது செயலராக, ராஜேந்திர சோழன் இருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement