கழிப்பிடத்துக்காக தினமும் ஒரு கி.மீ. நடை
பல்லடம்: நாகரிகமும் தொழில்நுட்பமும் உச்சத்தைத் தொட்டுவிட்ட இந்த நவீனக் காலத்திலும், விடியற்காலையில் ஒரு கழிப்பிடத்தைப் பயன்படுத்துவதற்காகப் பெண்கள், குழந்தைகள் என ஒட்டுமொத்தக் கிராமமே ஒரு கிலோ மீட்டர் துாரம் நடந்து செல்லும் அவலம் பல்லடம் அருகே அரங்கேறி வருகிறது.
பல்லடம் ஒன்றியம், ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட சேடபாளையம் அரிஜன காலனியில் நுாற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு பல லட்சம் ரூபாய் அரசுப் பொது நிதியில் ஒரு பொதுக்கழிப்பிடம் கட்டப்பட்டது.
ஆனால், கட்டப்பட்ட சில தினங்களிலேயே போதிய பராமரிப்பின்றி பூட்டப்பட்டது. இன்று வரை கழிப்பிடம் புதர்மண்டி, பாழடைந்து கிடக்கிறது.
அப்பகுதி மக்கள் நம்மிடம் பகிர்ந்தவை:
“பல லட்சம் ரூபாய் மக்கள் வரிப்பணத்தில் கட்டப்பட்ட இந்தக் கழிப்பிடம், சில நாட்கள் மட்டும்தான் பயன்பாட்டில் இருந்தது. அதன் பிறகு பராமரிக்கவே இல்லை. இதுபற்றி ஊராட்சி நிர்வாகத்திடம் எத்தனையோ முறை மனு கொடுத்துப் பார்த்துட்டோம்; ஆனா எந்தப் பயனும் இல்லை.
இந்தக் காலத்துலயும் எங்க வீட்டுப்பெண்கள், பள்ளிக்குச் செல்லும் சிறுவர், சிறுமியர் என எல்லாரும் இயற்கை உபாதையைக் கழிக்க, தினமும் ஒரு கிலோ மீட்டர் துாரத்தில் உள்ள வேறொரு கழிப்பிடத்துக்கு நடந்து போக வேண்டியிருக்கு.
விடியற்காலையிலும், இரவு நேரங்களிலும் பெண்கள் படும் அவஸ்தை வார்த்தைகளால் சொல்ல முடியாது. இது அரசு நிதியை வீணடிக்கும் செயல் மட்டுமில்ல,எங்களுடைய சுகாதாரத்தையும் கேள்விக்குறியாக்கியிருக்கு.”
இவ்வாறு அவர்கள் கூறினர்.
வெற்றுப் பெருமை எதற்கு? கிராமப்புறங்களில் 'திறந்தவெளி கழிப்பிடமே இல்லாத முன்மாதிரி கிராமம்' என்று அரசு காகிதத்திலும், விளம்பரங்களிலும் பெருமை பேசுவதை நிறுத்த வேண்டும் என்பதே இவர்களின் முதன்மையான கோரிக்கையாக உள்ளது.
வெற்றுப் பெருமைகளைப் பேசுவதைத் தவிர்த்துவிட்டு, மக்களின் அடிப்படைத் தேவையை உணர்ந்து, வீணாகக் கிடக்கும் இந்தக் கழிப்பிடத்தை உடனடியாகப் பழுதுபார்த்து, பயன்பாட்டுக்குக் கொண்டு வர மாவட்ட நிர்வாகமும், ஊராட்சி அமைப்பும் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும்
-
பவானிசாகர் அணை கரையில் குட்டியுடன் திரிந்த யானைகள்
-
சிக்கய்ய அரசு கல்லுாரியில் கலந்தாய்வு இன்று துவக்கம்
-
பஞ்சர் ஒட்டும் தொழிலாளி மர்மச்சாவு அடித்துக் கொலையா என விசாரணை
-
இ.கம்யூ., கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
-
நாயால் தொழிலாளி பலி
-
அரசு பள்ளிகள் திறப்பு; மாணவர்களுக்கு வரவேற்பு இலவச புத்தகம், நோட்டு, சீருடை வழங்கல்