இந்தியா வந்தது ரஷ்ய எஸ் - 400 வான் கவசம்
புதுடில்லி: நம் நாட்டின் வான் பரப்பை பாதுகாக்கும் திறனை வலுப்படுத்தும் வகையில், ரஷ்யாவிடம் இருந்து நான்காம் கட்டமாக, எஸ் ----- 400 வான் கவச தளவாடங்கள் வந்து சேர்ந்தன.
தற்கால போர் முறைகள் பெரும்பாலும் வான் வழி தாக்குதலாகவே இருப்பதால், ஒவ்வொரு நாடும் வான் பரப்பை பாதுகாக்க அதிகம் செலவிடுகின்றன.
ஆப்பரேஷன் சிந்துாரின் போது பாகிஸ்தான் நம் எல்லைக்குள் டிரோன்களை அனுப்பி தாக்குதல் நடத்தின. அவற்றை ரஷ்யாவின் எஸ் - 400 வான் பாதுகாப்பு கவசம் மூலம் நம் ராணுவம் தடுத்து அழித்தது.
அதன் பின், வான் பரப்பை பாதுகாக்கும் திறனை வலுப்படுத்த ரஷ்யாவிடம் இருந்து எஸ்------ - 400 வான் பாதுகாப்பு கவசங்களை விமானப் படையில் சேர்க்கும் பணி வேகம் எடுத்தது.
இந்த வான் கவசத்தை நம் விமானப் படை, 'சுதர்ஷன்' என்ற பெயரில் அழைக்கிறது. ரஷ்யாவிடம் இருந்து, 5 எண்ணிக்கையிலான, எஸ் - 400 வாங்க ஒப்பந்தம் போடப்பட்டது. அதில் ஏற்கனவே, 3 எஸ் - 400 தளவாடங்கள் நம் நாட்டுக்கு வந்துவிட்டன.
அதன் பின், ரஷ்யா - உக்ரைன் போர் காரணமாக குறித்த நேரத்தில் வான் கவசங்களை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இந்நிலையில், நான்காவது எஸ் - 400 வான் கவச தளவாடங்கள் நம் நாட்டிடம் ஒப்படைக்கப்பட்டன.
இது, விரைவில் களத்தில் செயல்பாட்டுக்கு வர உள்ளது. எஸ் - 400 வான் கவசம், 600 கி.மீ.,க்கு அப்பால் வரும் ஏவுகணைகளையும் ரேடார் துணையுடன் கண்டறியும். 400 கி.மீ., துாரம் வரையிலான இலக்குகளை அழிக்கும்.