தேர்தலில் அ.தி.மு.க., நம்மை மதிக்கவில்லை நம் கட்சி நிர்வாகிகளிடம் ஒற்றுமை இல்லை: ஆலோசனைக் கூட்டத்தில் பா.ஜ.,வினர் குமுறல்

2

நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் கூட்டணி கட்சியான அ.தி.மு.க., நம்மை மதிக்கவில்லை. நமது கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் கூட ஒற்றுமையாக பணியாற்றவில்லை என ஆலோசனைக் கூட்டத்தில் பா.ஜ., வினர் குற்றம்சாட்டி பேசினர்.

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் குன்னுார் தொகுதியில் மட்டும் பா.ஜ., வெற்றி பெற்றது. தமிழக பா.ஜ.,தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட அனைவரும் தோல்வியை தழுவினர். தொடர்ந்து தேர்தலில் பா.ஜ., தோல்க்கான காரணம் குறித்து, தமிழகம் முழுதும் தொகுதி வாரியாக மேலிட பார்வையாளர் மூலம் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்து வருகிறது.

திண்டிவனத்தி காலை விழுப்புரம் வடக்கு மாவட்ட பா.ஜ., சார்பில் நடந்த கூட்டத்திற்கு, மாவட்ட தலைவர் விநாயகம் தலைமை தாங்கினார். மாவட்ட துணைத் தலைவர் எத்திராஜ், பொதுச் செயலாளர்கள் பாண்டியன், அன்பழகன். பொருளாளர் பிரேம், துணைத் தலைவர் சத்திய நாராயணன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

கூட்டத்தில், தோல்விக்காண காரணம், எதிர்காலத்தில் கட்சி மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், வரும்காலத்தில் தேர்தல் கூட்டணி உள்ளிட்டவைகள் குறித்து நிர்வாகிகளிடம் கருத்து கேட்கப்பட்டது.

நிர்வாகிகள் பேசுகையில், 'தேர்தலில் அ.தி.மு.க., தலைமையிலான கூட்டணியில், கூட்டணி கட்சியான பா.ஜ.,வை யாரும் மதிக்கவில்லை. மாவட்டத்தில் பா.ஜ., நிர்வாகிகள் தேர்தலில் ஒற்றுமையாக பணியாற்றவில்லை. வருங்காலத்தில் பா.ஜ., எந்த கட்சியுடனும் கூட்டணி வைக்காமல் தனித்து போட்டியிட வேண்டும். அப்போதுதான் கட்சி வளர்ச்சியடையும்.

தமிழகத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் மட்டும் தேர்தல் சீட் கொடுக்காமல், பரவலமாக அனைத்து மாவட்டங்களிலும் தேர்தலில் நிர்வாகிகள் போட்டியிடுவதற்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும்.

இதேபோல் பெரும்பாலான நிர்வாகிகள் தமிழகத்தில் பா.ஜ.,வளர்ச்சியடைய வேண்டும் என்றால், பா.ஜ.,மாநில தலைவராக அண்ணாமலையை மீண்டும் நியமிக்க வேண்டும்' என்றனர்.

தொடர்ந்து பா.ஜ., மாநிலச் செயலாளர் அமர்பிரசாத்ரெட்டி பேசுகையில், 'கூட்டணி கட்சியான பா.ஜ.,வை யாரும் மதிக்கவில்லை என்று கூறினீர்கள். இதேபோல் அனைத்து மாவட்டங்களிலும் தெரிவிக்கின்றனர். கூட்டணி கட்சியை குறை கூறுவது போல், மாவட்டத்தில் நீங்கள் ஒற்றுமையாக இருந்தால்தான் கட்சி வளரும்.

நான் ஆய்வு மேற்கொண்ட ஐந்து மாவட்டங்களிலும், வரும் தேர்தலில் யாருடனும் கூட்டணி வைக்காமல் பா.ஜ., தனித்து போட்டியிட வேண்டும் என்று கருத்து தெரிவித்தனர்.

இதேபோல் பா.ஜ.,வில் இளைஞர்களை ஈர்க்கக்கூடிய, இளைஞர்களின் எழுச்சி நாயகனாக இருக்கக்கூடிய ஒரு வலுவான முகம் நமக்குத் தேவை. அந்த முகத்தை வைத்துக் கொண்டுதான் நாம் அடுத்த தேர்தலை எதிர்கொள்ள வேண்டும் என்று சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

த.வெ.க.,ஆட்சி அமைந்த உடன் அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் பலர் த.வெ.க..,வில் இணைந்துள்ளனர். ஆனால், பா.ஜ.,வைச் சேர்ந்த யாரும் த.வெ.க.வில் இணையவில்லை. மேற்கு வங்கத்தில் பா.ஜ., எப்படி ஆட்சியை பிடித்ததோ அதுபோல், வருங்காலத்தில் தமிழகத்தில் பா.ஜ.,ஆட்சியை பிடிக்கும்' என்றார்.

Advertisement