கல்வி உரிமை சட்டத்தில் இட ஒதுக்கீடு வருமான உச்ச வரம்பு நிர்ணயிக்க வழக்கு

சென்னை; கல்வி உரிமை சட்டத்தின் கீழ், 25 சதவீத இட ஒதுக்கீட்டில் சேர்க்கப்படும், சமூக ரீதியில் பின் தங்கிய மாணவர்களின் பெற்றோருக்கு, வருமான உச்ச வரம்பு நிர்ணயிக்க கோரிய மனுவுக்கு பதிலளிக்க, தமிழக அரசுக்கு, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

கோவையை சேர்ந்த மறுமலர்ச்சி மக்கள் இயக்க தலைவர் ஈஸ்வரன், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய மனு:

மத்திய அரசின் கல்வி உரிமை சட்டத்தின் கீழ், தனியார் பள்ளிகளில் பட்டியலின, பழங்குடியின மாணவர்களுக்கும், பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கும், 25 சதவீத இடங்கள் ஒதுக்கப்படுகின்றன.

பொருளாதார ரீதியில் பின்தங்கிய குழந்தைகளின் பெற்றோருக்கு, ஆண்டுக்கு, 2 லட்சம் ரூபாய் வருமான உச்ச வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஆனால், பட்டியலின மற்றும் பழங்குடியின குழந்தைகளின் பெற்றோருக்கு, எந்த வருமான உச்ச வரம்பும் நிர்ணயிக்கப்படவில்லை. சமூக ரீதியில் பின்தங்கிய பிரிவினருக்கு, வருமான உச்ச வரம்பு நிர்ணயிக்க வேண்டும்.

இல்லையெனில் வசதியானவர்கள், ஜாதி அடிப்படையில் இந்த சலுகையை பெற அதிக வாய்ப்புள்ளது.

எனவே, பொருளாதார ரீதியில் பின்தங்கிய பிரிவினருக்கு வருமான உச்ச வரம்பு நிர்ணயிக்கப்பட்டது போல், சமூக ரீதியில் பின் தங்கியவர்களுக்கும் நிர்ணயிக்க வேண்டும்.

மஹாராஷ்டிரா, ஆந்திரா மாநிலங்களில், சமூக ரீதியில் பின்தங்கிய பிரிவினருக்கு, வருமான உச்ச வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதேபோல், தமிழகத்திலும் நிர்ணயிக்க கோரி, 2025ம் ஆண்டு அக்டோபரில், பள்ளிக் கல்வி துறைக்கு அளித்த, விண்ணப்பத்தை பரிசீலிக்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

இந்த வழக்கை விசாரித்த, தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வு, மனுவுக்கு பதில் அளிக்கும்படி, பள்ளி கல்வித் துறை செயலர், தனியார் பள்ளிகள் இயக்குநருக்கு உத்தரவிட்டு, விசாரணையை இரண்டு வாரங்களுக்கு தள்ளி வைத்தது.

Advertisement