கிடப்பில் பஞ்சமி நில சுற்றறிக்கை எஸ்.சி., ஆணையம் நோட்டீஸ்

சென்னை: பஞ்சமி நிலங்கள் மற்றும் ஆதிதிராவிட மக்களுக்கு, நிபந்தனையுடன் வழங்கப்பட்ட நிலங்கள் தொடர்பாக, தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம், கடந்த 2004ல் வெளியிட்ட சுற்றறிக்கையை அமல்படுத்தாதது குறித்து விளக்கம் கேட்டு, தமிழக வருவாய் துறைக்கு, தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய இயக்குநர் ரவிவர்மன் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

அதில் கூறியிருப்பதாவது:

பஞ்சமி நிலங்கள் மற்றும் ஆதிதிராவிட மக்களுக்கு வழங்கப்பட்ட நிபந்தனை நிலங்கள் குறித்த விபரங்களை, ஜமாபந்தி நேரத்தில் ஆய்வு செய்து, ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என, தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம், கடந்த 2004ல் சுற்றறிக்கை வெளியிட்டது.

ஆனால், இந்த சுற்றறிக்கை, கடந்த 22 ஆண்டுகளாக, தமிழகத்தில் முறையாக நடைமுறைப்படுத்தவில்லை.

சுற்றறிக்கையின் படி, மாவட்ட கலெக்டர் மற்றும் ஜமாபந்தி அலுவலர்களுக்கு, உரிய வழிகாட்டுதல் மற்றும் பயிற்சி வழங்க நடவடிக்கை எடுக்கவில்லை என, ஆணையத்திற்கு புகார் மனு கிடைத்துள்ளன.

இது தொடர்பாக, தமிழக அரசின் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை செயலர், உரிய விளக்கத்தினை, தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் நோட்டீஸ் கிடைக்கப் பெற்ற, 15 நாட்களுக்குள் அளிக்க வேண்டும். தவறினால் அரசியலமைப்பு சட்ட விதிகளின் படி, அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement