உள்ளாட்சி தேர்தல் விவகாரம் தி.மு.க., வழக்கு முடித்து வைப்பு

சென்னை: உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக, 2016ம் ஆண்டு தி.மு.க., தாக்கல் செய்த வழக்கை முடித்து வைத்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில், கடந்த 2016ம் ஆண்டு உள்ளாட்சி தேர்தலின்போது, பழங்குடியின மக்களுக்கு உரிய இடஒதுக்கீடு வழங்கப்படவில்லை என, தி.மு.க., சார்பில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், தேர்தல் தொடர்பான அறிவிப்பாணையை ரத்து செய்து உத்தரவிட்டது.

மேலும், உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், வேட்புமனுவில் குற்றப் பின்னணி விபரங்களை தெரிவிப்பதை கட்டாயமாக்குவதுடன், மறுத்தால் அவர்கள் வேட்புமனுவை நிராகரிக்க வேண்டும் என, மாநில தேர்தல் கமிஷனருக்கு, 2016, அக்டோபரில் உத்தரவிட்டது.

நிலுவையில் இருந்த இந்த வழக்கு, நீதிபதி எம்.தண்டபாணி முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஏற்கனவே இந்த வழக்கில் விரிவான உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது என, தி.மு.க., தரப்பில் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, வழக்கை முடித்து வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

Advertisement