125 குவாரிகளில் 'ரெய்டு' கனிமவளத்துறை நடவடிக்கை

சென்னை: தமிழகத்தில் விதிமீறல் புகார்கள் அடிப்படையில், ஐந்து மாவட்டங்களில் உள்ள, 28 நிறுவனங்களின் குவாரிகளில், கனிமவளத்துறை அதிகாரிகள் விசாரணையை முடுக்கி விட்டு உள்ளனர்.

தமிழகத்தில், கருங்கல் குவாரிகளில் விதி மீறல் நடப்பதாக புகார்கள் அதிகமாக வருகின்றன. எனவே, குவாரிகளை ஆய்வு செய்து, விதிமீறல்கள் குறித்து அறிக்கை அளிக்கும்படி, இயற்கை வளங்கள் துறை அமைச்சர் பிரபு, கடந்த வாரம் அதிகாரி களுக்கு உத்தரவிட்டார்.

தென்காசி, கன்னியா குமரி, விருதுநகர், மதுரை மாவட்டங்களில், அமைச்சர் நேரடியாக ஆய்வு மேற்கொண்டார். அதில் தெரியவந்த தகவல்கள் அடிப்படையில், 155 குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்க, அமைச்சர் பிரபு உத்தரவிட்டார்.

இதையடுத்து, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில், கனிமவளத்துறையினர் சோதனைகளை முடுக்கி விட்டுள்ளனர். இதில், விதிமீறல்கள் இருப்பது தெரியவந்ததால், உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இது குறித்து, கனிம வளத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

தமிழகம் முழுதும் விதிகளை மீறி செயல்படும் கல் குவாரிகள் தொடர்பான திடீர் சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

அந்த வகையில், சென்னையை ஒட்டியுள்ள செங்கல்பட்டில் 7; காஞ்சிபுரம் 5; திருவண்ணாமலை 6; ராணிப்பேட்டை 6; திருவள்ளூர் 4 என, மொத்தம் 28 நிறுவனங்களின் குவாரிகளில் விதிமீறல் புகார்கள் வந்துள்ளன.

இந்நிறுவனங்களுக்கு தொடர்புள்ள, 125க்கும் மேற்பட்ட குவாரிகளில் ஆய்வு நடந்து வருகிறது. அனுமதிக்கப்பட்ட காலத்தை கடந்து செயல்படும் குவாரிகளை உடனடியாக மூடவும், அனுமதிக்கு மாறாக, அதிக அளவு கருங்கல் எடுக்கப்பட்ட குவாரிகளை, 'சீல்' வைக்க உத்தரவிட்டு வரு கிறோம்.

கடந்த சில நாட்களாக இந்த பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. இது தொடர்பான விபரங்கள், அறிக்கையாக அரசுக்கு அனுப்பப்பட உள்ளன .

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement