தேர்தலில் வாக்குறுதி அளித்தது போன்று  பயிர் கடன் தள்ளுபடி செய்ய கோரிக்கை

பொள்ளாச்சி: தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில், பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் ஆர்ப்பாட்டம் நடந்தது. விவசாய சங்க பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

அதில், தேர்தல் பிரசாரத்தின் போது, விவசாயிகளின் கூட்டுறவு கடன் சங்கங்களில் பெற்ற பயிர் கடன்களை, 5 ஏக்கருக்கும் குறைவாக உள்ள அனைத்து விவசாயிகளுக்கும் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும்; 5 ஏக்கருக்கு மேல் உள்ள விவசாயிகளுக்கு, 50 சதவீதம் தள்ளுபடி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது.

அந்த அறிவிப்பை செயல்படுத்த முதல்வர் விஜய் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி விவசாயிகள் கோஷங்களை எழுப்பினர். தற்போது அறிவிக்கப்பட்ட பயிர் கடன் தள்ளுபடியால் பலர் பயன்பெற முடியாத நிலை உள்ளது. எனவே,  வாக்குறுதிப்படி தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.

மனு அளிப்பு தமிழ்நாடு தென்னை உற்பத்தியாளர் நிறுவனங்களின் நட்பமைப்பு தலைவர் சக்திவேல் தலைமையில், விவசாயிகள் சங்க பிரதிநிதிகள், சப் – கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

மனுவில் கூறியிருப்பதாவது:

ஏரி, குளம், குட்டைகளில் விலையில்லா வண்டல் மண் எடுக்க அனுமதி வழங்கியதற்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். கூட்டுறவு சங்கங்களில், பயிர்கடன்கள் தள்ளுபடி செய்வது குறித்து வெளியிடப்பட்ட அறிவிப்பு விவசாயிகள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.

ஆட்சிக்கு வந்தால் தேர்தல் வாக்குறுதிப்படி விவசாயிகள் பெற்றுள்ள பயிர் கடனை தள்ளுபடி செய்வீர்கள் என்ற நம்பிக்கையோடு விவசாயிகள் பயிர் கடன்களை திரும்ப செலுத்தாமல் காத்திருந்தனர்.

தற்போது வெளியிட்ட அரசாணையின்படி, திரும்ப செலுத்தாத விவசாயிகளுக்கு பெற்றுள்ள கடன் தொகைக்கு அபராத வட்டியுடன் திரும்ப செலுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.  எனவே, தேர்தலின் போது அறிவித்தபடி பயிர் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement