ரூ.2,289 கோடி மதிப்பிலான சைபர் மோசடி; 638 பேர் கைது; குஜராத் போலீசார் அதிரடி

ஆமதாபாத்: குஜராத்தில் சைபர் மோசடிகளை தடுக்கும் நோக்கில், போலி கணக்குகள் மூலம், 2,289 கோடி ரூபாய் மதிப்பிலான பண பரிவர்த்தனைகள் மேற்கொண்டது கண்டறியப்பட்டுள்ளது. இது தொடர்பாக, 638 பேர் கைது செய்யப்பட்டு உள்ளதாக மாநில போலீசார் தெரிவித்துள்ளனர்.

குஜராத்தில், முதல்வர் பூபேந்திர படேல் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, சைபர் மோசடிகளை தடுக்கும் வகையில் மத்திய அரசுடன் இணைந்து குஜராத் போலீசார், 'ஆப்பரேஷன் மியூல் அக்கவுண்ட் 1.0' என்ற நடவடிக்கையை கடந்த ஆண்டு துவங்கினர்.

இதில், சைபர் குற்றவாளிகள் மீது மாநிலம் முழுதும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதன்மூலம், 565 வழக்குகள் பதிவு செய்த நிலையில், 638 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மொத்தம், 2,289 கோடி ரூபாய் மதிப்பிலான சைபர் மோசடிகள் கண்டறியப்பட்டுள்ளன.

நாடு முழுதும் மொத்தம் 4,052 சைபர் குற்றங்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில், 491 குற்றங்கள் குஜராத்தில் பதிவாகி உள்ளது. இந்த நடவடிக்கையின் காரணமாக காசோலைகள் மற்றும் ஏ.டி.எம்., மூலம் பணம் எடுக்கும் நடைமுறையில் மிகப்பெரிய அளவில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக குஜராத் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வகை மோசடிகளை தடுக்க, ரிசர்வ் வங்கி வழிகாட்டுதலின்படி, இந்திய டிஜிட்டல் பணப்பரிமாற்ற நுண்ணறிவு மையம் சார்பில் ஏ.ஐ., எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, ஒவ்வொரு பண பரிமாற்றமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் சந்தேகத்திற்கு உரிய கணக்குகளை எளிதில் அடையாளம் கண்டு, நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக குஜராத் போலீசார் குறிப்பிட்டுள்ளனர்.

Advertisement