அடுத்தாண்டு எட்டாம் வகுப்பு வரை புதிய பாடப்புத்தகம் பொதுத்தேர்வு ஆய்வுக்கூட்டத்தில் இயக்குநர் பேச்சு

மதுரை: தமிழகத்தில் அடுத்தாண்டில் நான்கு முதல் எட்டாம் வகுப்பு வரை புதிய பாடத்திட்டம் அமல்படுத்தப்படும் என கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் தெரிவித்தார்.

மதுரையில் பொதுத் தேர்வு முடிவுகள் குறித்து உயர், மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கான ஆய்வுக் கூட்டம் கண்ணப்பன் தலைமையில் நடந்தது.

மேலுார் டி.இ.ஓ., கணேசன் வரவேற்றார். டி.இ.ஓ.,க்கள் செந்தில்குமார் (மதுரை), தென்கரை முத்துப்பிள்ளை (மதுரை தொடக்க கல்வி), கார்மேகம் (தனியார் பள்ளிகள்), மோகன் (மாநகராட்சி) முன்னிலை வகித்தனர். மூத்த தலைமையாசிரியர்கள் சந்திரன் உள்ளிட்டோர் பொதுத் தேர்வு தேர்ச்சி குறித்து கருத்துக்கள் தெரிவித்தனர். இயக்குனர் கண்ணப்பன் பேசியதாவது: மாநிலத்தில் பொதுத் தேர்வு தேர்ச்சி குறித்த ஆய்வுக் கூட்டம் மதுரையில் துவங்கியுள்ளது. இந்தாண்டு 1 - 3 ம் வகுப்புக்கு புதுப்பிக்கப்பட்ட பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதற்காக 95 ஆயிரம் அரசு, 20 ஆயிரம் உதவிபெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு பல்வேறு மையங்களில் பயிற்சி வகுப்பு நடக்கிறது.

புதிய புத்தகத்தில் பாடப்புத்தகத்துடன் 'ஒர்க் புக்'கும் இணைந்து ஒரே புத்தகமாக மாற்றப்பட்டுள்ளது. மாணவர்கள் படிக்க எளிமையாக்கப்பட்டுள்ளன. இதுபோல் அடுத்தாண்டு 4 - 8, அதற்கு அடுத்தாண்டு 9 - 12 வகுப்புக்கும் புதிய பாடத்திட்டங்கள் அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப் படுகிறது. பொருளாதார, தொழில்நுட்ப மாற்றம், அறிவியல் வளர்ச்சிக்கு ஏற்ப புத்தகங்களில் மாற்றம் செய்யப்படும். எளிமையான கற்றலுடன் மாணவர்களின் சிந்தனைத் திறன் மேம்படும் வகையில் இப்புத்தகங்கள் தயாராகின்றன. பொதுத் தேர்வு தேர்ச்சி என்பது முதல் மாவட்டம் - கடைசி மாவட்டத்திற்கு இடையேயோன தேர்ச்சி சதவீதம் மிகக் குறைவாகவே உள்ளது. ரேங்க் முக்கியமில்லை. ஆசிரியர்களின் உழைப்பு தான் முக்கியம்.

புதுக்கோட்டையில் மூன்று ஆய்வுக்கூட்டங்கள் நடத்தப்பட்டதன் எதிரொலியாக இந்தாண்டு அம் மாவட்டம் முன்னிலை பெற்றுள்ளது.

எந்த இடத்தில் கவனம் செலுத்தினால் தேர்ச்சியை அதிகரிக்கலாம் என்பது ஆசிரியர்களின் முக்கிய பொறுப்பாக இருக்க வேண்டும். ஆய்வகங்களை முழுமையாக பயன்படுத்த வேண்டும். விளையாட்டில் தேசிய அளவில் இதுவரை 56 தங்கம் உட்பட 206 பரிசுகள் பெற்று நாட்டில் 7 வது இடத்தில் தமிழகம் உள்ளது என்பது கல்வித்துறைக்கு பெருமை.

இவ்வாறு பேசினார்.

Advertisement