மஹாராஷ்டிராவில் ரூ.2.25 கோடி போதை பொருள் பறிமுதல்

நாக்பூர்: மஹாராஷ்டிராவின் நாக்பூரில் உள்ள உப்பல்வாடி பகுதி அடுக்கு மாடி குடியிருப்பில் வாடகைக்கு தங்கியிருக்கும் நபர் பெருமளவிலான போதை பொருளை பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று முன்தினம் அந்த அடுக்குமாடி குடியிருப்பில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது 14 பாக்கெட்டுகளில் பதுக்கி வைத்திருந்த மெபட்ரோன் போதை பொருளை பறிமுதல் செய்தனர்.

அங்கு வாடகைக்கு இருந்த மஹ்கர் அலி அக்பர் அலி என்பவரை கைது செய்தனர். 7.5 கிலோ எடையுள்ள அந்த போதை பொருளின் மதிப்பு 2.25 கோடி ரூபாய் என போலீசார் தெரிவித்தனர்.

இது குறித்து நாக்பூர் போலீஸ் கமிஷனர் ரவீந்தர் குமார் சிங்கால் கூறியதாவது:

உத்தர பிரதேசத்தில் இருந்து ரயில் மற்றும் பஸ்களில் நாக்பூருக்கு போதை பொருள் கடத்தி வரப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட அலி மஹாராஷ்டிரா மற்றும் உத்தர பிரதேசம் ஆகிய இரு மாநில போதை பொருள் கடத்தல் கும்பலுக்கு இடைத்தரகராக செயல்பட்டுள்ளார். இந்த கடத்தல் கும்பலுடன் தொடர்புடைய மற்ற நபர்களை தேடி வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement