குழாய் உடைந்து குடிநீர் வீண்

சிவகாசி: சிவகாசி விளாம்பட்டி ரோடு விலக்கிலிருந்து சித்துராஜபுரம் செல்லும் ரோட்டில் குழாய் உடைந்து குடிநீர் வீணான நிலையில் ரோடும் மோசமாக சேதமடைந்து இருப்பதால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.

சிவகாசி விளாம்பட்டி ரோடு விலக்கில் இருந்து சித்துராஜபுரம் 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. சித்துராஜபுரம் மட்டுமின்றி பூலாவூரணி ஊராட்சிக்கு உட்பட்ட பிருந்தாவனம் நகர், ராஜதுரை நகர் பகுதி பள்ளி கல்லுாரி மாணவர்கள், வேலைக்கு செல்பவர்கள் எளிதாக சிவகாசிக்கு வர இந்த ரோட்டைத்தான் பயன்படுத்துகின்றனர். மேலும் இ.டி., ரெட்டியபட்டி பகுதியில் இருந்தும் மக்கள் சிவகாசிக்கு இந்த ரோட்டில் தான் வருகின்றனர். தவிர பட்டாசு ஆலைகளுக்கு செல்லும் வாகனங்களும் இதே ரோட்டில்தான் வந்து செல்கின்றன.

இந்நிலையில் கருமன் கோயில் செல்லும் வழியில் குழாய் உடைந்து குடிநீர் வீணாகிறது. இதனால் ரோடும் மிகவும் மோசமாக சேதம் அடைந்து போக்குவரத்திற்கு பயனற்ற நிலையில் உள்ளது. இந்த ரோட்டில் வருகின்ற கார் உள்ளிட்ட பெரிய வாகனங்கள் தட்டு தடுமாறியே வர வேண்டியுள்ளது. எனவே இப்பகுதியில் சேதம் அடைந்த குழாயினை சரி செய்வதோடு ரோட்டினை உடனடியாக சீரமைக்க வேண்டும்.

Advertisement