மத்திய அரசின் நுண்ணீர் பாசன திட்டம் இணையத்தில் விண்ணப்பிக்க அழைப்பு

கரூர்:மத்திய அரசின் நுண்ணீர் பாசன திட்டத்தில் பயன்பெற, இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என, கலெக்டர் முத்துக்குமரன் தெரிவித்தார்.




இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: கரூர் மாவட்டத்தில், மத்திய அரசின் நுண்ணீர் பாசன திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டமானது, தோட்டக்கலைத்துறை சார்பில், 2026--27ம் ஆண்டிற்கு, 1,370 ஹெக்டேர் பரப்பில், 753.50 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படவுள்ளது. இதில், சிறு, குறு விவசாயிகளுக்கு, 100 சதவீத மானியத்தில் நுண்ணீர் பாசன அமைப்பு, ஹெக்டேர் ஒன்றுக்கு அதிகபட்சமாக ஜி.எஸ்.டி., வரியையும் சேர்த்து, 1.27 லட்சம் ரூபாய் வரையிலும்; இதர விவசாயிகளுக்கு, 75 சதவீத மானியத்தில், 97,000 ரூபாய் வரையிலும் வழங்கப்படுகிறது. அனைத்து தோட்டக்கலை பயிர்களுக்கும் சிறு விவசாயிகள், 5 ஏக்கர் வரையிலும், குறு விவசாயிகள், 2.50 ஏக்கர் வரையிலும், 100 சதவீத மானியத்தில் நுண்ணீர் பாசன அமைப்புகளை தங்கள் நிலங்களில் அமைத்துக்
கொள்ளலாம்.
இதர விவசாயிகள், 75 சதவீத மானியத்தில், 12.5 ஏக்கர் வரை இத்திட்டத்தில் பயன்பெறலாம். பயிர்களின் இடைவெளிக்கு ஏற்றாற்போல் மானிய தொகை மாறுபடும். சொட்டு நீர்ப்பாசனம் அமைத்து, 7 ஆண்டு நிறைவுற்று இருந்தால் புதிதாக மீண்டும் சொட்டு நீர்ப்பாசனம் அமைத்து கொள்ளலாம்.
மேலும், சேதமடைந்துள்ள உபகரணங்கள் (பக்கவாட்டு குழாய்) மட்டும் மானியத்தில் பெற்று சொட்டு நீர்ப்பாசனம் அமைத்துக்கொள்ளலாம். தெளிப்பு நீர் பாசனம் அமைத்து, மூன்றாண்டு நிறைவு பெற்றிருந்தால், சொட்டு நீர் பாசனமாக மாற்றிக்கொள்ளலாம். இத்திட்டத்தில் ஆதார் அட்டை நகல், ரேஷன் அட்டை நகல், அடங்கல், கூட்டு வரைபடம், கணினி சிட்டா உள்பட ஆவணங்களுடன் அருகில் இருக்கும் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகியும் அல்லது tnhorticulture.tn.gov.in என்ற இணைய தளத்திலும் விண்ணப்பிக்கலாம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement