செல்வவிழிமங்கலத்தில் 6 மாதமாக தலைவிரித்தாடும் குடிநீர் பிரச்னை போராட்டத்தில் ஈடுபட பகுதி மக்கள் முடிவு

ஸ்ரீபெரும்புதுார், ஜூன் 4–

ஸ்ரீபெரும்புதுார் அருகே, செல்வவிழிமங்கலம் கிராமத்தில் ஆறு மாதங்களாக குடிநீர் வினியோகம் இல்லாததால், அப்பகுதி மக்கள் கடும் இன்னலுக்கு உள்ளாகி வருகின்றனர்.

ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியத்திற்குட்பட்ட செல்வவிழிமங்கலம் கிராமத்தில் 600க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. அப்பகுதியில் நிலத்தடி நீரில் உப்பு தன்மை மிகுதியாக உள்ளது.

இதனால், அருகே உள்ள கீரநல்லுார் கிராமத்தில் ஆழ்துளை கிணறு அமைத்து, செல்வவிழிமங்கலத்திற்கு குழாய் வழியே குடிநீர் வினியோகிக்கப்படுகிறது.

இந்த நிலையில், சென்னை – பெங்களூரு அதிவிரைவு சாலை பணியின் போது, கீரநல்லுாரில் இருந்து குடிநீர் வரும் குழாயில் உடைக்கப்பட்டது.

இதனால், பல மாதங்களாக குடிநீர் வருவது நின்று போனது. இதனால், பகுதி மக்கள் குடிநீர் இல்லாமல் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.

அதேபோல், உப்பு தன்மை அதிகம் உள்ள தண்ணீரை குளிக்க பயன்படுத்தும் போது, குழந்தைகளுக்கு சரும நோய் பிரச்னைகள் உண்டாகுகுவாதக, அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து அப்பகுதியை சேர்ந்தவர்கள் கூறியதாவது:

கீரநல்லுாரில் இருந்து 2 கி.மீ., குழாய் வழியே குடிநீர் வினியோகிக்கப்படுறது. இந்த நிலையில், சென்னை – பெங்களூரு அதிவிரைவு சாலை பணியின் போது குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது.

இதனால், ஆறு மாதங்களாக குடிக்க மற்றும் வீட்டு உபயோகத்திற்கு தனியார் டேங்கர் மூலம் தண்ணீரை விலை கொடுத்து வாங்கி உபயோகித்து வருகின்றோம். இரு வாரங்களுக்கு முன், சாலை பணியினால் சேதமான குடிநீர் குழாய் உடைப்பு சரி செய்யப்பட்டது.

இருந்தும், தற்போது மோட்டார் பிரச்னை, டிராஸ்பார்மர் பிரச்னை உள்ளிட்ட காரணங்கள் கூறி, குடிநீர் வினியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.

எனவே, தலைவிரித்தாடும் குடிநீர் பிரச்னைக்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைவில் தீர்வு காண வேண்டும். இல்லை என்றால் அடுத்தக்கட்டமாக போராட்டத்தில் ஈடுபட முடுவெடுத்து உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இது குறித்து ஸ்ரீபெரும்புதுார் வட்டார வளர்ச்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘செல்வவிழிமங்கலம் கிராமத்திற்கு நான்கு ஆழ்துளை கிணறு மூலமாக, குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. அவ்வப்போது, மின் பிரச்னை நிலவி வருகிது. தற்போது, கூடுதலாக 2 ஆழ்துளை கிணறு அமைத்து, தடையின்றி குடிநீர் வினியோகித்திட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது’ என்றார்.

Advertisement