விமான எரிபொருள் விலை உயர்வை சமாளிக்க ரூ.10,000 கோடி! நிதியம் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்
- நமது சிறப்பு நிருபர் -
விமான எரிபொருள் விலை உயர்வால் தவிக்கும் விமான நிறுவனங்களுக்கு உதவும் நோக்கில், 10,000 கோடி ரூபாய் மதிப்பில் புதிய நிதியத்தை உருவாக்க மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்துள்ளது.
மேற்காசிய போர் பதற்றம் காரணமாக, சர்வதேச அளவில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டருக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மேலும், வினியோக தொடரிலும் பாதிப்பு நீடிக்கிறது. இதனால், நம் நாட்டில் பெட்ரோல் - டீசல் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
மறுபுறம் ஏ.டி.எப்., என்றழைக்கப்படும், விமான எரிபொருள் விலையும் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. மார்ச் முதல் மே மாதம் வரையிலான காலக்கட்டத்தில் மட்டும் விமான எரிபொருளின் விலை இரண்டரை மடங்கு அதிகரித்துள்ளது.
அதாவது, மார்ச் மாதத்தில் விமானத்திற்கு செலுத்தப்படும் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை, 60 ரூபாய் 50 காசுகளாக இருந்த நிலையில், மே மாதத்தில், ஒரு லிட்டர், 142 ரூபாய் வரை விற்கப்பட்டது.
உச்ச வரம்பு
இதனால், முழு வருவாயில், எரிபொருளுக்கே, 40 சதவீதம் வரை செலவழிக்கும் நிலைக்கு விமான நிறுவனங்கள் தள்ளப்பட்டன. மறுபுறம் சர்வதேச சந்தையில் நாளுக்கு நாள் கச்சா எண்ணெய் விலை உயர்ந்ததால், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களும் பெரும் பாதிப்பை சந்தித்தன.
இதையடுத்து, உள்நாட்டு விமான நிறுவனங்களுக்கு தற்காலிக நிவாரணம் அளிக்கும் வகையில், விமான எரிபொருள் விலையை லிட்டருக்கு, 75 ரூபாய், 60 காசுகளாக நிர்ணயித்து மத்திய அரசு உச்ச வரம்பு விதித்தது.
இந்த உச்சவரம்பால், பொதுத்துறை எண்ணெய் சந்தைப்படுத்துதல் நிறுவனங்களும் பாதிப்பை சந்திக்க கூடாது என்பதற்காக, 10,000 கோடி ரூபாய் மதிப்பிலான விமான எரிபொருள் விலை நிலைப்படுத்தல் நிதியத்தை உருவாக்க, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டத்தில் நேற்று ஒப்புதல் அளிக்கப்பட்டது.
மறு ஆய்வு
கூட்டத்துக்கு பின், மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இந்த, 10,000 கோடி ரூபாய் நிதியானது ஒரு சுழற்சி நிதியமாக செயல்படும். அதாவது, எரிபொருள் விலை உயரும்போது, இந்த நிதியத்தில் இருந்து எண்ணெய் நிறுவனங்களுக்கு மானியம் வழங்கப்படும். விலை குறையும்போது வித்தியாச தொகை, எண்ணெய் நிறுவனங்களிடம் இருந்து வசூலித்து, நிதியத்தில் சேர்க்கப்படும்.
இந்த விமான எரிபொருள் விலை நிலைப்படுத்தல் ஆதரவுத் திட்டம் முதற்கட்டமாக, 36 மாதங்கள் வரை அமலில் இருக்கும். ஆண்டுதோறும் இதன் செயல்பாடுகள் குறித்து மறுஆய்வு செய்யப்படும்.
இத்திட்டத்தை எவ்வித தொய்வும், முறைகேடுகளும் இன்றி வெளிப்படைத்தன்மையுடன் செயல்படுத்துவதை உறுதி செய்ய உயர்மட்டக் கண்காணிப்பு குழுவையும் மத்திய அரசு அமைத்துள்ளது.
மத்திய விமானப் போக்குவரத்து, பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் மற்றும் மத்திய நிதியமைச்சகத்தின் செலவினத் துறையின் பிரதிநிதிகள் இந்த கண்காணிப்பு குழுவில் இடம் பெறுவர்.
மத்திய அரசு உருவாக்கும் இந்த புதிய நிதியத்தால், உள்நாட்டு விமான நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ள எரிபொருள் செலவு பெருமளவு குறையும். மேலும், உள்நாட்டு விமான போக்குவரத்து துறையை நம்பியுள்ள, 77 லட்சம் வேலை வாய்ப்புகளும் பாதுகாக்கப்படும். விமான நிலைய கட்டமைப்புகளில் செய்யப்பட்டுள்ள பொது முதலீடுகளின் நஷ்டத்தை தவிர்க்கவும் இந்த நிதியம் உதவும்.
தவிர, எரிபொருள் விலை உயர்வில் நேரடி பாதிப்பு பயணியர் மீது சுமத்தப்படுவதும் பெருமளவு குறையும். விமான டிக்கெட்டுகளின் விலை திடீரென உயர்வது கட்டுப்படுத்தப்படும்.
பாகிஸ்தான் வான்வெளி தொடர்ந்து மூடப்பட்டு இருப்பதால், ஐரோப்பா, வட அமெரிக்கா மற்றும் மத்திய ஆசிய நாடுகளுக்கான சர்வதேச விமான வழித்தடங்களில் எவ்வித இடையூறும் இல்லாமல், நம் நாட்டு விமான நிறுவனங்கள் லாபகரமாக சேவையை தொடங்குவதற்கும், இந்த எரிபொருள் மானிய விலை நிலைப்படுத்தல் நிதியம் அவசியமாகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும்
-
மைதானத்தை துாய்மைப்படுத்த வைத்த தீ மீன்வள கல்லுாரி முழுதும் பரவி பாதிப்பு
-
பராமரிப்பில்லாத பஸ் நிலையம் பேரம்பாக்கம் மக்கள் சிரமம்
-
மது விற்பனையில் என்ன மாற்றம் செய்து விட்டனர்? செந்தில் பாலாஜி கேள்வி
-
அமைச்சருக்கு தெரியாமல் நடக்கிறதா பதவி உயர்வு கவுன்சிலிங்? புலம்பும் டாஸ்மாக் ஊழியர்கள்
-
தேரில் மீஞ்சூர் வரதராஜ பெருமாள் உலா வடம்பிடித்து இழுத்து பக்தர்கள் பரவசம்
-
அட்டப்பாளையம் சமூக காட்டில் சவுடு மண்... கபளீகரம்:இரவு நேரங்களில் கொள்ளையர்கள் அட்டகாசம்