அரசு பள்ளிகள் திறப்பு; மாணவர்களுக்கு வரவேற்பு இலவச புத்தகம், நோட்டு, சீருடை வழங்கல்


ஈரோடு:ஒருவழியாக கோடை விடுமுறை முடிவுக்கு வந்த நிலையில், தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டன.

ஈரோடு மாவட்டத்தில் அரசு, நிதியுதவி, மெட்ரிக் பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டன. மழலைகளுக்கு ஆரத்தி எடுத்தும், பூ மற்றும் இனிப்பு கொடுத்து ஆசிரியர்கள் வரவேற்றனர். சில பள்ளிகளில் மேள தாளங்கள் முழங்க வரவேற்பு நடந்தது. சில பள்ளிகளில் புதிதாக சேர்ந்த மாணவ, மாணவிகளின் பெற்றோருக்கு பள்ளி சார்பில் அறிமுக கூட்டம் நடத்தப்பட்டது.
Latest Tamil News 1,169 அரசு, நிதியுதவி பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும், 53,716 மாணவ, மாணவிகளுக்கு நேற்று காலை உணவாக கோதுமை ரவை உப்புமா வழங்கப்பட்டது. சத்துணவு சாப்பிடும் மாணவர்களுக்கு, முட்டையுடன் உணவு அளிக்கப்பட்டது. புதிய பாட திட்டத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் மூன்றாம் வகுப்பு வரை பாடம் கற்பித்தல் தொடங்கப்பட்டது. அதேசயம் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை இலவச நோட்டு, புத்தகம், சீருடை, காலணி உள்ளிட்ட கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன.
மாவட்டத்தில், 113 அரசு-நகரவை மேல்நிலை பள்ளிகள், 77 அரசு-நகரவை உயர்நிலை பள்ளிகள், 17 நிதியுதவி மேல்நிலை பள்ளிகள், 13 நிதியுதவி உயர்நிலை பள்ளிகள், 10 சுய நிதி மேல்நிலை பள்ளிகள், 4 சுய நிதி உயர்நிலை பள்ளிகளுக்கு இலவச கல்வி நல பொருட்கள், 6 முதல் பிளஸ் 2 வரை இலவச பாட புத்தகம், 6 முதல் 10ம் வகுப்பு வரை நோட்டு புத்தகம், 6-8 மாணவ, மாணவிகளுக்கு இலவச சீருடை வழங்கப்பட்டது.
அரசு-நகரவை உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் 74,120, நிதியுதவி உயர்-மேல்நிலை பள்ளிகள் 18,126, சுய நிதி உயர்-மேல்நிலை பள்ளிகள் 1,643 என 6 முதல் பிளஸ் 2 வரை மொத்தம் 93,889 மாணவ,மாணவிகள் உள்ளனர். இவர்களுக்கு புத்தகம் வழங்கப்பட்டது.
6 முதல் 10ம் வகுப்பு வரையிலான 64,338 மாணவ, மாணவிகளுக்கு நோட்டு, 6-8 வகுப்பில் சத்துணவு சாப்பிடும் மாணவர்கள் 26,864, மாணவிகள் 27,328 பேருக்கு இலவச சீருடை, 6 முதல் பிளஸ் 2 வரையிலான 92,246 பேருக்கு புத்தக பை, 6 முதல் 10ம் வகுப்பு வரையிலான 64,338 பேருக்கு ஷூ மற்றும் சாக்ஸ், மலைப்பகுதிகளில் 6 முதல் 8 ம் வகுப்பு வரை பயிலும் 1,361 பேருக்கு ஆங்கிள் பூட், இதே அளவுக்கு மழை கோட், கம்பளி சட்டை வழங்கப்பட்டது.
6 முதல் 9ம் வகுப்பு வரையிலான புதிய மாணவர்ககள் சேர்க்கைக்கு மட்டும் 14,435 கணித உபகரண பெட்டி, 6 முதல் 10ம் வகுப்பு வரை புதிய மாணவர் சேர்க்கைக்கு மட்டும், 16,009 புவியியல் வரைபடம் வழங்கப்பட்டது. 1, 2ம் வகுப்பில், 42 பேருக்கு வண்ணமெழுகு குச்சி, 3-5ம் வகுப்பில் 179 பேருக்கு வண்ண பென்சில், 1-5ம் வகுப்பில் 147 பேருக்கு காலணி வழங்கப்பட்டது. கல்வி ஆண்டின் முதல் நாள் என்பதால் மாணவ, மாணவிகள் உற்சாகத்துடன் காணப்பட்டனர்.
* பவானி பூக்கடை வீதி விவேகானந்தர் அரசு நிதி உதவி பெறும் பள்ளியில், மாணவ, மாணவிகளுக்கு மேள தாளங்கள் முழங்க சந்தனம், குங்குமம் வைக்கப்பட்டு, பூ மற்றும் சாக்லேட் வழங்கி, ஆசிரியர்கள் வரவேற்றனர்.

Advertisement