ஆசிரியர்கள் தான் தலைமுறையை மாற்ற முடியும்: சி.இ.ஓ., அறிவுரை

கோபி:'ஆசிரியர்கள் மட்டும் தான், நம் குழந்தைகளின் தலைமுறையை மாற்ற முடி யும்,'' என, ஈரோடு சி.இ.ஓ., மான்விழி பேசினார்.

ஈரோடு மாவட்டம், கோபி யூனியனில் அரசு மற்றும் நிதியுதவி பிரிவில், 91 துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில், ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு வரை போதிக்கும், 125 இடைநிலை ஆசிரியர்களுக்கு, புதிய பாடநுால் சார்ந்த மூன்று நாள் பயிற்சி கடந்த, 1ல் துவங்கியது. நேற்று நடந்த நிறைவு நாள் பயிற்சியில், ஈரோடு சி.இ.ஓ., மான்விழி பேசியதாவது:
வெவ்வேறான சூழலில் இருந்து, வீட்டை விட்டு பள்ளிக்கு வரும் குழந்தைகள், தன் ஆசிரியர்கள் தான் உலகத்திலேயே சிறந்த அறிவாளி என கருதி வருவர். அவர்களை முதல் வகுப்பு ஆசிரியர்கள் பக்குவமாக கையாள வேண்டும். கற்றல் விளைவை நோக்கி கற்றுத்தந்தால், அக்குழந்தை பள்ளி பருவத்தை, 12 ஆண்டுகளை முடிந்து, உயர் கல்விக்கு பின் அது எதிர்கால வாழ்க்கைக்கு பெரும்
உறுதுணையாக இருக்கும்.
கற்றல் விளைவு மட்டு
மின்றி, ஒழுக்கத்தையும் சேர்த்து கற்றுக்கொடுக்க வேண்டிய இடத்தில், ஆசிரியர்கள் உள்ளனர். ஆசிரியர்களை நம்பி மட்டுமே குழந்தைகள் பள்ளிக்கு வருகின்றனர். ஆசிரியர் என்ன உதாரணமாக கூறுகிறாரோ, அதை குழந்தைகள் தங்களின் வாழ்க்கை முறைக்கு தகுந்தவாறு வடிவமைத்து கொள்கின்றனர். ஆசிரியர்கள் மட்டும் தான், குழந்தைகளின் தலைமுறையை மாற்ற முடியும்.
இவ்வாறு பேசினார்.


7,633 பேர் அட்மிஷன்
ஈரோடு சி.இ.ஓ., மான்விழி கூறுகையில்,'' ஈரோடு மாவட்டத்தில் நடப்பு கல்வியாண்டில், அரசு மற்றும் நிதியுதவி பிரிவில், 1,278 பள்ளிகளில் கடந்த மார்ச்.,1ம் தேதி முதல், தற்போது வரை, ஒன்று முதல், பிளஸ் 2 வகுப்பு வரை, 7,633 மாணவ, மாணவியர் புதிதாக சேர்க்கையாகி உள்ளனர். மாணவர், மாணவியர் எண்ணிக்கை குறைவாக உள்ள பள்ளிகளில் சேர்க்கையை அதிகரிக்க, வட்டார கல்வி அலுவலர்கள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்,'' என்றார்.

Advertisement