வீடுகளில் விழும் கழிவு துகள்கள்:  கலெக்டரிடம் புகார் மனு 

பெதப்பம்பட்டி: தொழிற்சாலையில் இருந்து பறந்து வீடுகளில் விழும் தென்னை நார் துகள்களால் உடல் நலம் பாதிக்கிறது; உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விருகல்பட்டி கிராம மக்கள் திருப்பூர் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

குடிமங்கலம் ஒன்றியம், விருகல்பட்டி கிராமத்தைச்சேர்ந்த மக்கள் நேற்று திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறை தீர் முகாமில், கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

அதில், 'எங்கள் கிராமத்தில் தனியார் தென்னை நார் உற்பத்தி தொழிற்சாலை இயங்கி வருகிறது. இத்தொழிற்சாலையில் இருந்து பறந்து வரும் தென்னை நார் கழிவு துகள்களால், பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு வருகிறது.

குறிப்பாக உணவுப்பொருட்கள், குடிநீரில் விழும் துகள்களால், மக்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு வருகிறது. வாகனங்களில் செல்லும் போது கண்களில் துகள்கள் விழுகிறது; கால்நடைகளுக்கான தீவனங்களையும் இருப்பு வைக்க முடிவதில்லை.

நாள்தோறும் கிலோக்கணக்கில் வீடுகளில் நேரடியாக விழும் மஞ்சி துகள்களால், எங்களது இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளது. விளைநிலங்களிலும் வேலை பார்க்க முடிவதில்லை.

இது குறித்து புகார் தெரிவித்தும், தொழிற்சாலை நிர்வாகத்தினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்து, உடல் நலம் பாதிக்கப்படுவது குறித்து அதிகாரிகள் குழுவினர் கள ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு, மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement