விண்வெளி புதிரை அவிழ்த்த மாணவர்

பல ஆண்டுகளாக விண்வெளியின் ஆழத்திலிருந்து பூமியை வந்தடையும் மர்மமான ரேடியோ சிக்னல்களுக்கான காரணத்தை முனைவர் பட்ட மாணவர் கோவி ரோஸ் கண்டறிந்துள்ளார். சிட்னி பல்கலை ஆய்வாளர்கள் தலைமையிலான சர்வதேசக் குழு, இந்த தொடர் சிக்னல்கள் நம் பால்வீதியில் உள்ள இரண்டு நட்சத்திரங்களின் அபூர்வமான இணைப்பிலிருந்து வெளிவருவதை உறுதி செய்துள்ளது.

'ASKAP J17455051' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த அமைப்பில், பூமியின் அளவும், ஆனால் சூரியனுக்கு நிகரான எடையும் கொண்ட ஒரு 'வெள்ளை குறுமீன்' (White dwarf) உள்ளது. இதனுடன், சூரியனின் எடையில் பத்தில் ஒரு பங்கு மட்டுமே கொண்ட சிறிய 'சிவப்பு குறுமீனும்' (Red dwarf) இணைந்துள்ளது. இவை இரண்டும் மிக நெருக்கமாக, வெறும் 1.4 மணி நேரத்திற்கு ஒருமுறை ஒன்றையொன்று சுற்றி வருகின்றன.

அப்போது, சிவப்பு குறுமீனிலிருந்து பொருட்களை வெள்ளை குறுமீன் வலுவாகத் தன்பக்கம் ஈர்க்கிறது. இந்த ஈர்ப்பின்போது அப்பொருட்கள் வெப்பமடைந்து சக்திவாய்ந்த எக்ஸ்- கதிர்களை வெளியிடுகின்றன. அதேசமயம், இரு நட்சத்திரங்களுக்கும் இடையிலான காந்தப்புல தாக்கங்களால் ஒவ்வொரு 1.4 மணி நேரத்திற்கும் சக்திவாய்ந்த ரேடியோ சிக்னல்கள் வெடித்துச் சிதறி பூமியை வந்தடைகின்றன.

இதுவரை இத்தகைய சிக்னல்கள் மெதுவாகச் சுழலும் நியூட்ரான் நட்சத்திரங்களிலிருந்தே (Pulsars) வருவதாக நம்பப்பட்டது. ஆனால், அந்த கோட்பாட்டை இப்புதிய கண்டுபிடிப்பு மாற்றியமைத்துள்ளது. மேலும், விண்வெளியின் அதீத காந்தப்புலங்கள், பிளாஸ்மா இயற்பியல் மற்றும் ஈர்ப்பு விசையின் செயல்பாடுகளை ஆராய இது ஒரு சிறந்த ஆய்வுக் கூடமாக அமையும் என, விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Advertisement