வேளாண் கூட்டுறவு வங்கியை இயக்க விவசாயிகள் கோரிக்கை

உத்திரமேரூர், ஜூன் 5–

காவணிப்பாக்கம், தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியில் செயலரை நியமித்து முறையாக வங்கியை இயக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உத்திரமேரூர் ஒன்றியம், சீத்தாவரத்தில் காவணிப்பாக்கம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் இயங்குகிறது. அரும்புலியூர், சிறுதாமூர், பட்டா, அருங்குன்றம், மதூர், பழவேரி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள், இந்த கூட்டுறவு வங்கியில் உறுப்பினர்களாக அங்கம் வகிக்கின்றனர்.

விவசாயம் சார்ந்த பணிகளுக்கான கடனுதவி, விவசாய இடுபொருட்கள் மற்றும் உரங்கள் உள்ளிட்டவை பெறவேண்டி விவசாயிகள் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியை அணுகுகின்றனர்.

காவணிப்பாக்கம் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி முறையாக செயல்படுவதில்லை எனவும், இதனால் தேவையான உதவிகளை அவ்வப்போது பெறுவதில் சிரமம் உள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து அரும்புலியூர் விவசாயிகள் கூறியதாவது,

காவணிப்பாக்கத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் செயலர் பணியிடம் காலியாக உள்ளதால், படூர் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி செயலர், இங்கு கூடுதல் பொறுப்பு செயலராக உள்ளார்.

ஒரு நாளில் படூர், மற்றொரு நாளில் சீத்தாவரம் என செயலர் வந்து செல்வதால். தேவைக்கு சந்தித்து உதவிகள் மற்றும் ஆலோசனைகள் பெறுவதில் சிக்கலாகி பல்வேறு பணிகளை முடிக்க இயலாமல் சிரமத்திற்கு உள்ளாகிறோம்.

மேலும், இங்கு அடகு வைக்கும் நகைகளை மீட்க பணம் கட்டினால், உடனுக்குடன் நகைகள் கிடைக்காமல் காலதாமதம் ஏற்படுகிறது.

எனவே, இப்பகுதி தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் செயலர் பணியிடம் நிரப்பி, வங்கி முறையாக செயல்படுத்த துறை ரீதியான அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement