இதே நாளில் அன்று

ஜூன் 5:

தஞ்சை, மகர்நோன்புச்சாவடியில், நாராயணசாமி - பாப்பு தம்பதிக்கு மகனாக, 1914ல், இதே நாளில் பிறந்தவர் தஞ்சை ராமையாதாஸ்.

தஞ்சை செயின்ட் பீட்டர்ஸ் பள்ளி, கரந்தை தமிழ் கல்லுாரியில் படித்து, ஆசிரியர் ஆனார். தொடர்ந்து, 'சுதர்சன கான சபா' நாடகக் குழுவில் எழுத்தாளரானார்.

பின், 'ஜெயலட்சுமி கான சபா' என்ற நாடகக் குழுவை துவக்கி, 'கம்பர், வள்ளி திருமணம்' உள்ளிட்ட நாடகங்களை, தமிழகமெங்கும் நடத்தினார். இவரது, 'மச்சரேகை' நாடகத்தை பார்த்த டி.ஆர்.மகாலிங்கம், திரைப்படமாக தயாரித்தார். அடுத்து, விஜயா புரொடக் ஷன்ஸ் நிறுவனத்தில் கதாசிரியராக சேர்ந்து, பாதாள பைரவி, மிஸ்ஸியம்மா, மாயா பஜார் உள்ளிட்ட 25 படங்களுக்கு திரைக்கதை, வசனம்; 10 படங்களுக்கு கதை; 532 பாடல்களை எழுதினார்.

இவர் எழுதிய, 'பிருந்தாவனமும் நந்த குமாரனும், சொக்கா போட்ட நவாபு, வாங்க மச்சான் வாங்க, மயக்கும் மாலை பொழுதே, கல்யாண சமையல் சாதம், எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே' உள்ளிட்ட பாடல்கள் என்றும் இனிப்பவை.

இவரது நுால்கள் அரசுடைமை ஆக்கப் பட்டுள்ளன. இவர் தன், 50வது வயதில், 1965, ஜனவரி 16ல் மறைந்தார்.

இவரது பிறந்த தினம் இன்று!

Advertisement