பிரேத பரிசோதனை செய்ய தாமதம்: உறவினர்கள் மறியல் போராட்டம்

ப.வேலுார்:இறந்தவர் உடலை பிரேத பரிசோதனை செய்ய தாமதமானதால், உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
நாமக்கல் மாவட்டம் ப.வேலுார் அருகே சின்னசோளி பாளையத்தை சேர்ந்த திருமூர்த்தி, 33, கரூர் மாவட்டம் வெங்கமேடு டவுன் பஞ்சாயத்தில், டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி தவமணி, 30. இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர். தற்போது சின்னசோளிபாளையத்தில் மாரியம்மன் பண்டிகை நடந்து வருகிறது. நேற்று முன்தினம் மதியம் பண்டிகையின் போது, நண்பர்களுடன் சேர்ந்து திருமூர்த்தி மது அருந்தி உள்ளார்.

பின்னர் போதையில் வீட்டுக்கு வந்த திருமூர்த்தியை, தவமணி கண்டித்துள்ளார். கோபமடைந்த அவர், வீட்டின் கதவை பூட்டிக் கொண்டு, அறையில் இருந்து வெளியே வராததால், சந்தேகமடைந்த உறவினர்கள் பார்த்தபோது, துாக்கில் தொங்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். பின்னர் திருமூர்த்தியை மீட்டு, ப.வேலுார் அரசு மருத்துவமனைக்கு மாலை, 4:00 மணிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். ஜேடர்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து, உடலை பிரேத பரிசோதனை செய்ய ப.வேலுார் அரசு மருத்துவமனை சவக்கிடங்கில் வைத்தனர்.
ப.வேலுார் அரசு மருத்துவமனையில், இறுதிச்சடங்கு செய்ய நேற்று காலை முதல் உறவினர்கள் காத்திருந்தனர். அப்போது, ப.வேலுார் அரசு மருத்துவமனையில் பணியாளர் பணியிடம் காலியாக இருப்பதால், திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் இருந்து பணியாளர் வர வேண்டும் என டாக்டர்கள் தெரிவித்தனர். மாலை 4:00 மணிக்கு மேல் பரிசோதனை செய்யப்படும் என, அரசு மருத்துவமனை ஊழியர்கள் தெரிவித்ததால், உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பின்னர், டாக்டர்களை கண்டித்து ப.வேலுார் பள்ளி சாலையில் நேற்று மதியம் 12:00 மணிக்கு, 100க்கும் மேற்பட்ட உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர். ப.வேலுார் போலீசார், அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி, காலதாமதமின்றி பிரேத பரிசோதனை செய்து, இறந்தவர் உடல் ஒப்படைக்கப்படும் என போலீசார் உறுதியளித்ததால், அவர்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Advertisement