கழிவுநீர் தேக்கமாக மாறிவிட்டது வேகவதி ஆறு ...விபரீதம்! சுற்றுச்சூழல் சீர்கேட்டால் மக்கள் திண்டாட்டம்; மாநகராட்சியை குறைகூறும் நீர்வள ஆதாரத்துறை
காஞ்சிபுரம்:காஞ்சிபுரத்தில் முக்கிய நீர்நிலையான வேகவதி ஆறு, அதிகாரிகளின் பாராமுகத்தால் கழிவுநீர் ஓடும் ஆறாக மாறிவிட்டது. சுற்றுச்சூழல் சீர்கேடு ஏற்பட்டு நகர மக்கள் திண்டாடி வருகின்றனர். ஆற்றை மீட்டெடுக்க வேண்டிய நீர்வள ஆதாரத்துறை அதிகாரிகளோ, மாநகராட்சி மீது பழி போட்டு தப்பிக்க முயற்சித்து வருகின்றனர்.
பாலாற்றின் கிளை ஆறான வேகவதி ஆறு, தாமல் ஏரி பகுதியில் உருவாகி, காஞ்சிபுரம் நகரம் வழியாகச் சென்று பாலாற்றில் கலக்கிறது. மொத்தம், 26 கி.மீ., நீளமுள்ள ஆறு, பல நுாற்றாண்டுகளாக, காஞ்சிபுரம் மக்களின் முதன்மை நீராதாரமாகவும், ஆன்மிக சிறப்புமிக்க நதியாகவும் திகழ்கிறது.
காஞ்சிபுரம் நகரின் வரலாற்றுடன், நாகரிக வளர்ச்சியு டனும் பின்னிப் பிணைந்த இந்த வேகவதி ஆறு, தன் அடையாளத்தையே இழக்கும் அளவிற்கு சீரழிந்த நிலையில் காணப்படுவது காஞ்சிபுரம் மக்களிடையே கடும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

துர்நாற்றம்
ஒரு காலத்தில் நகரின் நீராதாரமாகவும், விவசாயத்தின் உயிர்நாடியாகவும் விளங்கிய இந்த ஆறு, தற்போது கழிவுநீர் கால்வாயாக மாறிவிட்டது.
மாசடையாமல் ஓரளவு பராமரிப்புடன் காணப்பட்ட இந்த வேகவதி ஆறு, 30 ஆண்டுகளில், மிக மோசமான நிலையை அடைந்தது. ஆற்றின் உள்ளேயும், கரைகளிலும் நுாற்றுக்கணக்கான வீடுகள் ஆக்கிரமித்து கட்டப்பட்டதால், அதன் கழிவுநீர் ஆறுகளில் விடப்பட்டது.
அதுமட்டுமின்றி, ஆற்றின் இரு புறங்களில் உள்ள ஆயிரக்கணக்கான வீடுகளின் பாதாள சாக்கடை கழிவுநீர், தற்போது வரை ஆற்றில் விடப்படுவது தொடர் கதையாகிஉள்ளது.
இவற்றை நீர்வள ஆதாரத்துறையும், மாநகராட்சியும் தடுக்காமல் வேடிக்கை பார்ப்பதாலேயே இன்று கழிவுநீர் ஆறாக மாறி உள்ளது. ஆற்றுநீர் கருமை நிறமாக மாறி, கடும் துர்நாற்றம் வீசும் நிலை உருவாகியுள்ளது.
தும்பவனம் பகுதியில் ஏற்பட்டுள்ள மோசமான நிலையை பார்த்தால், ஆறு எவ்வளவு மோசமான நிலையில் உள்ளது என தெரிய வரும். பல இடங்களில் நீரின் ஓட்டமே இல்லாமல் கழிவுகள் தேங்கி கிடப்பதால் சுகாதார சீர்கேடுகளும் அதிகரித்துள்ளன.
வேகவதி ஆற்றின் இருபுறங்களிலும் பல்வேறு ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருவது, மற்றொரு முக்கிய பிரச்னை. ஆற்றுப்படுகைகளில் கட்டடங்கள், வணிக வளாகங்கள் மற்றும் குடியிருப்புகள் உருவாகியுள்ளதால் ஆற்றின் அகலம் குறைந்து வருகிறது.
இதன் காரணமாக மழைக்காலங்களில் வெள்ளநீர் வெளியேற முடியாமல் குடியிருப்பு பகுதிகளில் தேங்கும் அபாயம் அதிகரித்துள்ளது.
கோரிக்கை
சில பகுதிகளில் நடைபெற்ற சட்டவிரோத மணல் கடத்தலும் ஆற்றின் இயற்கை அமைப்பை பெருமளவில் பாதித்துள்ளது. இதனால் கரையோரங்களில் அரிப்பு ஏற்பட்டு, நிலத்தடி நீர் சேமிப்பு திறன் குறைந்து உள்ளது.
ஆற்றில் துாய்மையான நீர் வரத்து குறைந்ததால் பாசன வசதி பாதிக்கப்பட்டு, விவசாய உற்பத்தியும் குறைந்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
நிலத்தடி நீர்மட்டமும் தொடர்ந்து சரிந்து வருவதால் எதிர்காலத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. ஆற்றில் தேங்கி நிற்கும் கழிவுநீர் காரணமாக கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகி, நோய்கள் பரவும் சூழல் உருவாகியுள்ளது.
நத்தப்பேட்டை ஏரி விவகாரம், குன்றத்துார் குப்பை விவகாரம் போன்ற பிரச்னைகளுக்கு, தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து, விசாரணை செய்தது.
அதுபோல, வேகவதி ஆற்றின் நிலையை பற்றி, தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மாநகராட்சி அதிகாரிகளும், நீர்வள ஆதாரத்துறை அதிகாரிகளின் அலட்சியம் காரணமாகவே, வேகவதி ஆறு இந்த அளவுக்கு மோசமான நிலைக்கு சென்றிருப்பதை யாரும் மறுக்க முடியாது.
ஆற்றில் கழிவுநீர் விடு வதையும், மணல் கடத்தல், ஆக்கிரமிப்பு அகற்றம் போன்றவை மேற்கொள்ளாதவரை, ஆற்றின் நிலை மேலும் மோசமான நிலைக்கு செல்லும் என்பதில் சந்தேகமில்லை.
நடவடிக்கை இல்லை
இதுகுறித்து, நீர்வள ஆதாரத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
ஒவ்வொரு ஆண்டும் பருவமழை சமயத்தில், நாங்கள் ஆற்றை பொக்லைன் இயந்திரம் வாயிலாக துார்வாரி வருகிறோம். ஆற்றின் நிலை மோசமாவதற்கு, மாநகராட்சியின் கழிவுநீர் திறந்துவிடுவது தான் காரணம்.
காஞ்சி மாநகராட்சிக்கு பலமுறை தெரிவித்துவிட்டோம். ஆனால், மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. பாதிப்பு தீவிரத்தை மாநகராட்சியிடம் மீண்டும் தெரிவிப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும்
-
பிரவீன் சக்கரவர்த்தியின் பதிவு அதிகப் பிரசங்கித்தனம்: மார்க்சிஸ்ட் கண்டனம்
-
மணிப்பூரில் மீண்டும் வன்முறை: கணவன், மனைவி உட்பட 3 பேர் சுட்டுக்கொலை
-
அண்ணாமலை ராஜினாமா; பாஜ ஏற்பு
-
ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை; 5.25 சதவீதமாக நீடிக்கும் என அறிவிப்பு
-
முதல்வர் விஜய் தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம்; முக்கிய அறிவிப்புகள் வெளியாகும்?
-
அதிக வெப்ப அபாயத்தில் 14 இந்திய நகரங்கள்: ஆக்ஸ்போர்டு ஆய்வில் அதிர்ச்சி