சிறுமிக்கு பாலியல் தொல்லை வாலிபருக்கு 9 ஆண்டு சிறை

திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே, 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபருக்கு, 9 ஆண்டு சிறை தண்டனை விதித்து, திருவள்ளூர் போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

திருவள்ளூர் மாவட்டம், நெற்குன்றம் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் அந்தோணிராஜ், 37. பணம் வசூலிக்கும் பணி செய்து வந்த இவர், கடந்த 2023ம் ஆண்டு, ஆகஸ்ட் 19ம் தேதி, அப்பகுதியில் உள்ள வீடு ஒன்றிற்கு பணம் வசூலிக்க சென்றுள்ளார்.

அப்போது, வீட்டின் கதவு மேல் வைக்கப்பட்டிருந்த வசூல் பணத்தை எடுத்து விட்டு, அங்குள்ள புத்தகத்தில் பணம் வரவு வைத்து திரும்பியுள்ளார்.

அப்போது, வீட்டில் துாங்கி கொண்டிருந்த 13 வயது சிறுமிக்கு, சுரேஷ் அந்தோணிராஜ் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

தகவலறிந்த புழல் மகளிர் போலீசார், போக்சோ வழக்கு பதிந்து, சுரேஷ் அந்தோணிராஜை கைது செய்து, திருவள்ளூர் போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

திருவள்ளூர் மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்து வந்தது. நேற்று நடந்த விசாரணையில், 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சுரேஷ் அந்தோணிராஜுக்கு, 9 ஆண்டுகள் சிறை தண்டனையும், 20,000 ரூபாய் அபராதமும் விதித்து, நீதிபதி தீர்ப்பளித்தார்.

சிறுமிக்கு, அரசு 2 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும், நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து, புழல் போலீசார் சுரேஷ் அந்தோணிராஜை புழல் சிறையில் அடைத்தனர்.

Advertisement