வெலிங்டன் நீர்த்தேக்க கரைகள் பலப்படுத்தும் பணி... தீவிரம்: பருவ மழைக்குள் முடிக்க விவசாயிகள் எதிர்பார்ப்பு
திட்டக்குடி:கீழ்ச்செருவாய் வெலிங்டன் நீர்த்தேக்கத்தில், ரூ. 130 கோடியில் நடந்து வரும் கரை பலப்படுத்தும் ஷட்டர்கள்சீரமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். திட்டக்குடி அடுத்த கீழ்ச்செருவாய் கிராமத்தில் பிரதான நீர்த்தேக்கமாக வெலிங்டன் உள்ளது.
இந்த நீர்த்தேக்கமானது 2,580 மில்லியன் கன அடி நீர்பிடிப்பு கொண்டது. இதன் மூலம், 24 ஆயிரம் ஏக்கருக்கு மேலான விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
தென்மேற்கு, வடகிழக்கு மற்றும் கோடை மழை காலங்களில் வெலிங்டன் நீர்த்தேக்கத்தில் முழு கொள்ளளவு தண்ணீர் பிடிப்பு செய்து விவசாயத்திற்கு பயன்படுத்துவது வழக்கம்.

ஆனால் வெலிங்டன் நீர்த்தேக்கத்தின் கரைகள், பாசனத்திற்கு திறக்கப்படும் மேல் மட்ட மற்றும் கீழ்மட்ட வாய்க்கால்கள், கிளை வாய்க்கால்கள் முறையாக துார்வாரப்படுவதில்லை.
வடகிழக்கு பருவமழை காலங்களில் நீர்த்தேக்கத்தில் நீர்மட்டத்தின் அளவு மட்டுமே 29 அடியை எட்டி விடுகின்றன.
இதனை கருத்தில் கொண்டு அதிகாரிகளும் தண்ணீரை பாசனத்திற்கு திறந்து விடுகின்றனர். ஆனால் நீர்த்தேக்கமும், வாய்க்கால்களும் சரிவர துார்வாராததால் பல இடங்களில் கரைகள் வலுவிழந்து உடைப்பு ஏற்படுகின்றன.
இதனை நீர்வளத்துறை அதிகாரிகளும் அவ்வப்போது 'பொக்லைன்' மூலம் கரை உடைப்பை சரி செய்யும் பணியில் ஈடுபடுகின்றனர்.
நீர்த்தேக்கம் துார்வாருதல், கரைகள் மற்றும் பாசன வாய்க்கால்களை நிரந்தரமாக சீரமைக்க வேண்டும் என திட்டக் குடி, விருத்தாசலம் தாலுகா விவசாயிகள், விவசாய சங்க நிர்வாகிகள் அரசுக்கு பலமுறை கோரிக்கை விடுத்தனர்.
அதையேற்று, கடந்தாண்டு பிப்ரவரியில் கடலுாரில் நடந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் அப்போதைய முதல்வர் ஸ்டாலின் கீழ்ச்செருவாய் வெலிங்டன் நீர்த்தேக்கத்தின் கரைகள் பலப்படுத்துதல், வாய்க்கால்கள் புனரமைக்க ரூ. 130 கோடி நிதி ஒதுக்கப்படும் என அறிவித்தார். தொடர்ந்து, கடந்தாண்டு வெலிங்டன் நீர்த்தேக்கம் சீரமைக்க ரூ. 130 கோடி ஓதுக்கீடு செய்யப்பட்டது.
அதில், நீர்த்தேக்கத்தின் கரைகள் பலப்படுத்த சீரமை க்க 74 கோடி, முதன்மை கால்வாய் சீரமைக்க 20 கோடி, உபரி நீர் கால்வாய் சீரமைப்புக்கு 3 6 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்கான பணிகள் கடந்தாண்டு நவம்பரில் துவங்கி நடந்து வருகின்றன.
மேலும், இப்பணிகளை சென்னை நீர்வளத்துறை அதிகாரிகளும் மாதம் ஒருமுறை வெலிங்டன் நீர்த்தேக்கத்தில் உள்வாங்கிய கரை பகுதிகளை ஆய்வு செய்து பணிகளை தரமாக அமைக்க அறிவுறுத்தி வருகின்றனர்.
தற்போது, 13 கண் மதகுகள் 80 சதவீத பணிகள் முடிந்துள்ளன. கரைகள் பலப்படுத்தும் பணிகளுக்கு கீழச்செருவாய் உட்பட 5 ஏரிகளில் இருந்து கடினமான வண்டல் மண் எடுத்து வந்து கரைகள் பலப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றது.
இது குறித்து நீர்வளத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
வடகிழக்கு பருவமழை காலங்களில் 200மீ., துாரத்திற்கு கரைகள் வலுவிழந்து உள்வாங்கின. இதனால் நீர்த்தேக்கத்தில் போதிய அளவு தண்ணீர் தேக்க முடியவில்லை.
விவசாயிகளின் கோரிக்கையேற்று, 130 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, மதகுகள் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.
மேலும், உள்வாங்கிய கரை பகுதியில் உள்ள முழு அளவு மண்ணை எடுத்து கரையில் நடுவே கான்கிரீட் சுவர்கள் அமைத்து இருபுறமும் வெளியூரில் இருந்து வண்டல் மண் போன்ற கடினமான மண் வகைகளை கொட்டி கரைகளை திடமாக அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. விரைவில் பணிகள் முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இது குறித்த விவசாய சங்க பிரதிநிதிகள் கூறுகையில், 'வெலிங்டன் நீர்த்தேக்கத்தின் கரைகள் மற்றும் மதகுகள் சீரமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.
இப்பணிகளை விவசாயிகள் பயன்பெறும் வகையில் தரமாகவும், விரைவில் துவங்க உள்ள பருவமழைக்குள் பணிகளை முடிக்க வேண்டும்' என்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement