பிரதமர் மோடிக்கு அழுத்தம் கொடுக்க முயற்சிப்பதில் பலனில்லை; சொல்கிறார் ரஷ்ய அதிபர் புடின்

11


நமது நிருபர்




இந்தியா- அமெரிக்கா உறவுகள் ரஷ்யாவுடனான உறவுகளை பாதிக்காது; பிரதமர் மோடிக்கு அழுத்தம் கொடுக்க முயற்சிப்பதில் பலனில்லை என ரஷ்ய அதிபர் புடின் தெரிவித்தார்.

இது குறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது: வேறு எந்த நாட்டுடனும் இந்தியா கொண்டுள்ள இருதரப்பு உறவுகளால் எந்தவிதமான பாதகமான விளைவுகள் ரஷ்யாவுக்கு ஏற்படவில்லை. இந்தியா ஒரு நம்பகமான கூட்டாளி. இந்தியா உலகின் முக்கியப் பொருளாதாரங்களில் ஒன்றாகத் திகழ்வதோடு, தற்போது வலுவான பொருளாதார வளர்ச்சியையும் கண்டு வருகிறது.

வரும் ஆண்டுகளில் இந்தியாவுக்கும், ரஷ்யாவுக்கும் இடையிலான இருதரப்பு வர்த்தகம் தொடர்ந்து கணிசமாக விரிவடையும். இருதரப்பு வர்த்தகம் 100 பில்லியன் டாலரை எட்டும் என்பதில் நான் நம்பிக்கையுடன் இருக்கிறேன். இந்தியா- அமெரிக்கா உறவுகள் ரஷ்யாவுடனான உறவுகளை பாதிக்காது. பிரதமர் மோடிக்கு அழுத்தம் கொடுக்க முயற்சிப்பதில் பலனில்லை. இந்தியாவுடனோ அல்லது சீனாவுடனோ உறவுகளில் எங்களுக்கு எந்தப் பிரச்னைகளும் இல்லை.

மேம்பட்ட ஆயுதங்கள் சார்ந்த விஷயங்களில் நாங்கள் இந்தியாவுக்கு ஒத்துழைப்பு வழங்குகிறோம். அவர்கள் தரை மற்றும் கடல் தளங்களில் இருந்து ஏவக்கூடிய பிரம்மோஸ் ஏவுகணைகளைத் தயாரித்துள்ளனர். Su-57 போர் விமானத்தைப் பொறுத்தவரை, இந்தத் தொழில்நுட்பத்தில் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று நாங்கள் எங்கள் இந்திய நண்பர்களுக்கு முன்மொழிந்தோம். இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற நாங்கள் தயாராக இருக்கிறோம். எங்களுக்கு இதில் எந்தப் பிரச்னைகளும் இல்லை.

மொத்த உள்நாட்டு உற்பத்தியின் அடிப்படையில் இந்தியா மூன்றாவது இடத்திலும், ரஷ்யா நான்காவது இடத்திலும் உள்ளன. சீனா, அமெரிக்கா, இந்தியா மற்றும் ரஷ்யா ஆகியவையே முதல் நான்கு இடங்களில் உள்ள நாடுகளாகும். சீன அதிபர் ஜின்பிங் மற்றும் பிரதமர் மோடி ஆகிய இருவரும், எல்லைப் பிரச்னைகள் உட்பட, இரு நாடுகளுக்கும் பொதுவான நலன் சார்ந்த அனைத்துப் பிரச்னைகளையும் தீர்க்க முயன்று வருகின்றனர். இவ்வாறு அதிபர் புடின் கூறினார்.

Advertisement