எவரெஸ்ட் சிகரத்தில் காணாமல் போனவர் 6 நாட்களுக்குப் பிறகு மீட்பு

5


காத்மண்டு:எவரெஸ்ட் சிகரத்தில் காணாமல் போன வழிகாட்டி ஒருவர், உணவு,தண்ணீர் மற்றும் கூடுதல் ஆக்சிஜன் இன்றி, 6 நாட்கள் கழித்து உயிருடன் மீட்கப்பட்டுள்ள சம்பவம் அனைவரையும் நெகழ்ச்சியடையச் செய்துள்ளது.

தவா ஷெர்பா என்ற வழிகாட்டி, போலந்து நாட்டைச் சேர்ந்த மலையேற்ற வீரர் ஒருவருடன் இணைந்து 29,032 அடி உயரமுள்ள எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை அடைய முயன்று, அது தோல்வியில் முடிந்ததது. இதைத் தொடர்ந்து மீண்டும் கீழே திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது கேம்ப் 3 மற்றும் கேம்ப் 4 ஆகிய பகுதிகளுக்கு இடையே தவா ஷெர்பா திடீரென காணாமல் போனார்.

அவர் கடைசியாக மே 29ம் தேதியன்று பார்க்கப்பட்டார். அவருடன் சென்ற மலையேற்ற வீரர் முகாமிற்கு திரும்பிய நிலையில், தவா அங்கு வந்து சேரவில்லை. பெரும்பாலான மலையேற்ற வீரர்கள் மலையை விட்டு வெளியேறிவிட்டதால், அவர் உயிருடன் திரும்புவார் என்ற நம்பிக்கையை மக்கள் இழக்கத் தொடங்கினர்.

ஆரம்பக்கட்ட தேடுதல் முயற்சிகளில் அந்த வழிகாட்டியப் பற்றிய எந்தவொரு தடயமும் கிடைக்கவில்லை. இதனால் தவா ஷெர்பா இறந்துவிட்டதாக உறுதியாக நம்பிய அவரது குடும்பத்தினர், அவருக்கான பாரம்பரிய இறுதிச் சடங்குகளைச் செய்யத் தொடங்கினர்.

இந்த சூழலில், எவரெஸ்ட்டின் கீழ் சரிவுகளில் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த ஒரு குழுவினர், ஆபத்தான கும்பு பனிப்பாறைபகுதிக்கு மேலே பனியில் ஒரு மனித உருவம் சிரமப்பட்டு நகர்வதைக் கண்டுள்ளனர். பின்னர், அது ஷெர்பா என்பதை உணர்ந்த அவர்கள், கடுமையான சோர்வு, காயங்களுடன் இருந்த அவரை, மலையிலிருந்து கீழே கொண்டு வந்தனர். அவர் அவசர மருத்துவ சிகிச்சைக்காக ஹெலிகாப்டர் மூலம் காத்மண்டுவிற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

இது குறித்து நேபாள மவுண்ட் எவரெஸ்ட் ஹைக்கிங் நிறுவனம் வெளியிட்ட பதிவில், "உணவு, தண்ணீர் அல்லது கூடுதல் ஆக்ஸிஜன் ஏதுமின்றி, ஆபத்தான கும்பு பனிப்பாறைப் பகுதியைத் தனியாகக் கடந்து தவா கிட்டத்தட்ட ஒரு வாரம் உயிர் பிழைத்துள்ளார். இது ஒரு அதிசயத்திற்கு எந்த விதத்திலும் குறைவானதல்ல," என்று குறிப்பிட்டுள்ளது.

Advertisement