குற்றவாளிகளின் புகலிடமாக மாறி வரும் செங்கை... அச்சுறுத்தல்!: வீட்டு உரிமையாளர்கள் சந்திக்கும் சட்டச்சிக்கல்

மறைமலைநகர்: வெளி மாநிலங்கள், மாவட்டங்களில் குற்றவழக்குகளில் தொடர்புடையவர்களின் புகலிடமாக செங்கல்பட்டு மாவட்டம் மாறி வருவதால், வீட்டை வாடகைக்கு விடும் உரிமையாளர்களுக்கு அச்சுறுத்தலாக உள்ளது. அடையாள ஆவணங்களைச் சரிபார்த்து, உள்ளூர் காவல் நிலையத்தில் தகவல்கள் தெரிவித்து, சட்ட நடைமுறைகளை பின்பற்றுவதன் மூலம், தேவையற்ற சிக்கல்களில் இருந்து வீட்டு உரிமையாளர்கள் தப்பிக்கலாம் என, போலீசார் தெரிவிக்கின்றனர்.

சென்னையை ஒட்டியுள்ள செங்கல்பட்டு மாவட்டம், தொழில், குடியிருப்பு, கல்வி என, பல்வேறு நிலைகளில் வளர்ச்சி அடைந்து வருகிறது.

குறிப்பாக, சிங்கபெருமாள் கோவில், மறைமலைநகர், ஊரப்பாக்கம், வண்டலுார், கூடுவாஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளில், வெளி மாவட்டங்கள் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கானோர் குடியேறி உள்ளனர்.

மகேந்திரா வேர்ல்டு சிட்டி, ஒரகடம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகள், ஐ.டி., நிறுவனங்கள் உள்ளிட்டவற்றில் பணிபுரிய இளம்பெண்கள் மற்றும் வாலிபர்கள், வாடகை வீடு எடுத்து, குடியேறி வருகின்றனர்.

இவ்வாறு குடியேறுவோரில் சிலர், அந்தந்த பகுதிகளில் திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபடுவதாக, போலீசார் பகீர் கிளப்பியுள்ளனர். அதனால், வாடகைக்கு ஆட்களை தங்கவைக்கும், வீட்டின் உரிமையாளர்கள் கவனமாக இருக்கும்படி எச்சரித்துள்ளனர்.

போலீசார், மேலும் கூறியதாவது:

வெளி மாவட்டம், மாநிலங்களில் குற்றம் செய்த நபர்கள், அங்கிருந்து தப்பி, வேலை வாய்ப்பு தேடி வருவதாக, செங்கல்பட்டு மாவட்டத்தில் குடியேறி வருகின்றனர்.

சமீபகாலமாக சிங்கபெருமாள் கோவில், பேரமனுார், திருத்தேரி, கீழக்கரணை உள்ளிட்ட பகுதிகள், குற்ற வழக்குகளில் தொடர்புடையோர் தஞ்சமடையும் பகுதிகளாக உள்ளன.

இரண்டு ஆண்டுகளுக்கு முன் மறைமலைநகர் அடுத்த கோவிந்தாபுரம் பகுதியில், வங்கதேச இளைஞர்கள் இருவர், என்.ஐ.ஏ., அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து போலி ஆதார் அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

கடந்தாண்டு, திருத்தேரி பகுதியில் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் அடித்து கொல்லப்பட்டார். அவரை கொலை செய்த நபர்களும், அதே பகுதியில் வாடகைக்கு தங்கி இருந்தவர்கள். அவர்கள் மீது ஏற்கனவே வெளி மாவட்ட காவல் நிலையங்களில் வழக்குகள் இருந்தன.

புறநகர் பகுதிகளில் லட்சக்கணக்கான மக்கள் கூடும் இடங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் பெருநிறுவனங்கள், கல்வி நிலையங்கள் இருப்பதால், புதிய நபர்களின் நடமாட்டத்தை கண்டறிவது அவ்வளவு எளிதல்ல.

போலி ஆவணங்கள் மற்றும் வேலை வாய்ப்பு பெறுவது உள்ளிட்ட காரணங்களால், குற்றங்களில் ஈடுபடுவோர், இங்கு தலைமறைவாகின்றனர்.

பல கட்ட தேடுதலுக்கு பின், குற்றவாளிகளை போலீசார் நெருங்கும்போது, பிற மாநிலங்கள், மாவட்டங்களுக்கு அவர்கள் எளிதில் தப்பிச் செல்ல விமான நிலையம், ரயில் மற்றும் பேருந்து வசதிகள் இருப்பதால், இப்பகுதிகளை குறிவைக்கின்றனர்.

இதுபோன்ற குற்றவாளிகள் மற்றும் சமூக விரோதிகள், வாடகை வீடுகளில் தங்குவதால், வீட்டு உரிமையாளர்களுக்கும் சட்டச் சிக்கல்கள் மற்றும் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் ஏற்பட்டு வருகிறது.

எனவே, வாடகைதாரரின் அடையாள ஆவணங்களைச் சரிபார்த்து, வாடகை ஒப்பந்தத்தை பதிவு செய்வதுடன், உள்ளூர் காவல் நிலையத்தில், வாடகைதாரர் பற்றிய தகவல்களை தெரிவிக்க வேண்டும்.

வீட்டில் சந்தேகத்திற்கிடமான நபர்களின் நடமாட்டம் தெரிந்தாலும் தெரிவிக்க வேண்டும். ஆனால், இவற்றை வீட்டு உரிமையாளர்கள் பின்பற்றுவதில்லை.

அதுமட்டுமல்லாமல், இளைஞர்கள், கல்லுாரி மாணவர்களை குறி வைத்து, கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை செய்யும் கும்பலும், வாடகை வீடுகளில் குடியேறி வருகிறது.

கடந்த வாரம் வாடகை வீட்டில் தங்கி புறநகரில் கஞ்சா விற்ற இருவரை கைது செய்த போலீசார், அந்த வீட்டில் இருந்து 8 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதே பகுதியில் 200 கிலோ தடை செய்யப்பட்ட 'குட்கா' புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. எனவே வீட்டின் உரிமையாளர்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.

வாடகை பணத்தை மட்டும் குறி வைத்து, வீட்டை வாடகைக்கு விடுவதால், அவர்களும் சிக்கலை சந்தித்து வருகின்றனர்.

முறையான சட்டப்பூர்வ நடைமுறைகளை பின்பற்றுவதன் மூலம், வீட்டு உரிமையாளர்கள் தங்கள் சொத்துக்களின் பாதுகாப்பை உறுதி செய்தால், தேவையற்ற சிக்கல்களில் இருந்து தப்பிக்கலாம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement