குழந்தை பெற்ற சிறுமி பலி மணமுடித்த வாலிபர் கைது

தேன்கனிக்கோட்டை: கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அடுத்த பெட்டமுகிலாளம் அருகே மலை கிராமத்தைச் சேர்ந்த, 14 வயது சிறுமியை, அப்பகுதியைச் சேர்ந்த மத்துாரான், 23, திருமணம் செய்தார். சிறுமி எட்டு மாத கர்ப்பிணியாக இருந்தும், மருத்துவமனைக்கு செல்லவில்லை.

மே, 28ல் சொந்த ஊருக்கு சிறுமி சென்ற நிலையில், அவருக்கு மூச்சு விடுவதில் சிரமம் இருந்தது.

அப்பகுதியில் உள்ள கிராம செவிலியரை தொடர்பு கொண்ட போது தான், சிறுமிக்கு குழந்தை திருமணம் செய்யப்பட்டு, கர்ப்பிணியாக இருப்பது தெரிந்தது. அடுத்த நாள், கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் நடந்த பரிசோதனையில், சிறுமியின் இரு சிறுநீரகமும் செயலிழந்து போனதும், தீராத ரத்தப்போக்கு இருப்பதும் தெரிந்தது.

சிறுமி உடல்நிலை மிகவும் ஆபத்தானதால், 29ம் தேதி இரவு அறுவை சிகிச்சை செய்து, அவர் வயிற்றில் இருந்த 1.5 கிலோ எடையில் பெண் குழந்தை வெளியே எடுக்கப்பட்டது.

தொ டர்ந்து, சேலம் அரசு மருத்துவமனையில் மேல்சிகிச்சைக்கு சேர்க்கப்பட்ட சிறுமி, நேற்று முன்தினம் உயிரிழந்தார்.

சிறுமியின் தாய் புகாரில், தேன்கனிக்கோட்டை மகளிர் போலீசார், 'போக்சோ' மற்றும் குழந் தை திருமண சட்டத்தில் மத்துாரானை கைது செய்தனர்.

Advertisement