தேர்தலில் அளித்த வாக்குறுதிகளை கண்டிப்பாக நிறைவேற்றுவேன்: அமைச்சர் ராஜிவ் உறுதி

திருவாடானை: திருவாடானை தொகுதி என் இதயம் போன்றது. தேர்தல் வாக்குறுதிகளை கண்டிப்பாக நிறைவேற்றுவேன் என்று அமைச்சர் ராஜிவ் பேசினார்.திருவாடானை அருகே சின்னக்கீரமங்கலத்தில் கல்லுார், பெரிய கீரமங்கலம், கருமொழி, ஓரிக்கோட்டை, டி.நாகனி ஆகிய 5 ஊராட்சி மக்களுக்கான குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. குடிநீர், சாலை வசதி, முதியோர் உதவித் தொகை, மின்சாரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை மக்கள் அளித்தனர். மனுக்களை பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்கமாறு சம்பந்தபட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து அமைச்சர் ராஜிவ் பேசியதாவது:

திருவாடானை தொகுதி எனது இதயம் போன்றது. தேர்தல் பிரசாரத்தின் போது நான் என்னென்ன வாக்குறுதிகளை கொடுத்தேனோ, அவைகளை கண்டிப்பாக நிறைவேற்றுவேன். இதில் யாருக்கும் எந்த சந்தேகமும் வேண்டாம். என்னை நம்பி வாக்களித்துள்ளீர்கள். வாரத்திற்கு 2 நாட்கள் இத்தொகுதியில் தங்கியிருந்து பணியாற்றுவேன். நீங்கள் எப்போதும் என்னை சந்தித்து குறைகளை கூறலாம்.

சுற்றுச்சூழல் பாதிப்பை தடுக்க மக்கள் அனைவரும் பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் குறைக்க வேண்டும். மக்கும், மக்காத குப்பையை தரம் பிரித்து துாய்மை பணியாளர்களிடம் வழங்க வேண்டும். திருவாடானை அரசு மருத்துவமனையில் புதிய கட்டடம் கட்டப்பட்டுள்ளது. அது விரைவில் திறக்கப்பட்டு அங்கு புறநோயாளிகள் சிகிச்சை பெறும் வகையில் செயல்படும் என்றார். முன்னதாக திருவாடானை அரசு மருத்துவமனையை அமைச்சராக பொறுப்பேற்று 3 வது முறையாக நேற்று ஆய்வு செய்தார்.

--

Advertisement